2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தனக்கு எதிராக 'பொய் சாட்சி'யை சிபிஐ உருவாக்கியுள்ளதாக, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா குற்றம்சாட்டினார்.
சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி முன்பு, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவரான ஆ.ராசா சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர், இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம் கூடுதல் தனி உதவியாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரி என்பவர் சாடசியம் அளித்தார்.
ஆ.ராசாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய அவர், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் ராசா அவ்வப்போது தொடர்புகொண்டு பேசி வந்ததாக கூறினார்.
அப்போது, நீதிமன்றத்தில் சந்தோலியா (ராசாவின் முன்னாள் உதவியாளர்) அருகில் இருந்த ஒரு நபரை சுட்டிக்காட்டி, அவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நீதிபதியிடம் புகார் கூறினார். இதனால், நீதிமன்றம் பரபரப்பானது.
பின்னர், கொலை மிரட்டல் விடுத்தவர் என ஆசிர்வாதத்தால் புகார் கூறப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தியபோது, அதுபோன்ற சம்பவம் எதுவும் நிகழவில்லை என்பது சிபிஐக்கு தெரியவந்தது.
ராசா குற்றச்சாட்டு...
இந்த நிலையில், சிபிஐ-யின் முக்கிய சாட்சியாகக் கருதப்படும் ஆசிர்வாதம் ஆச்சாரியை ராசா சார்பில் அவரது வழக்கறிஞர் சுஷில் குமார் குறுக்கு விசாரணை செய்தார்.
அப்போது, நேற்றைய தினம் நடந்தவை அனைத்தையும் நாடகம் என்று அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், இந்த வழக்கில் சிபிஐ பொய்யாக உருவாக்கியுள்ள சாட்சியம்தான் ஆசீர்வாதம் ஆச்சாரி. அவர் சொல்வது அனைத்தும் தவறானவை. நேற்று கூட அவர் அரங்கேற்றிய கொலை மிரட்டல் நாடகத்தை நீங்கள் அறிவீர்கள்.
சந்தோலியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை, வரும் 2-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அவருக்கு ஜாமீன் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே இந்த நாடகம் நடத்தப்பட்டது. ஆசிர்வாதம் ஆச்சாரி பொய் சாட்சியம் என்பதற்கு இதுவே சான்று," என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து நீதிபதி ஓ.பி.சைனி கூறுகையில், "அவர் (ஆச்சாரி) மிரட்டல் பற்றி முன்பு ஒருபோதும் தெரிவிக்கவில்லை. அப்படி ஏற்கெனவே சொல்லி இருந்தால், அந்தப் புகார் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதன் மூலம், இந்த வழக்கில் பலருக்கும் ஜாமீன் கிடைத்திருக்காது," என்றார்.
இந்த வழக்கில் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை சாட்சிகளிடம் தாம் குறுக்கு விசாரணை செய்யப்போவதில்லை என்று தெரிவித்து இருந்த ஆ.ராசா, வியாழக்கிழமையில் இருந்து குறுக்கு விசாரணை செய்யத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment