Friday, December 23, 2011

திருப்பதி கோவில் லட்டு சுவை, தரம் உயருகிறது.

திருப்பதி கோவில் லட்டு சுவை, தரம் உயருகிறது; கடலை பருப்பு, நெய், சர்க்கரையை நேரடியாக வாங்க முடிவு

திருப்பதி எழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றது. அதற்கு காரணம் அதன் சுவைதான். ஆனால் சமீப காலமாக லட்டுவின் தரமும், சுவையும் குறைந்து வருவதாக தேவஸ்தானத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. லட்டு சீக்கிரம் கெட்டு விடுவதாகவும் புகார் கூறப்பட்டது.

இதற்கு தீர்வு காண்பது குறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் லட்டு தயாரிக்க பயன்படும் கடலை பருப்பு, நெய், சர்க்கரை மற்றும் ஏலக்காய், முந்திரி பருப்பு போன்றவை வாங்க டெண்டர் விடப்படுவதன் மூலம் தரம் குறைந்த பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிய வந்தது.

இதனால்தான் லட்டு தரம் குறைந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மூலப் பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருப்பதி கோவிலில் ஒரு நாள் லட்டு தயாரிக்க 10 டன் கடலை பருப்பு, 10 டன் நெய், 10 டன் சர்க்கரை, 2 டன் முந்திரி பருப்பு, ஒரு டன் உலர்ந்த திராட்சை, 300 கிலோ ஏலக்காய் தேவைப்படுகிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ. 100 கோடி செலவிடப்படுகிறது.

இவைகளை நேரடியாக கொள்முதல் செய்வதன் மூலம் குறைந்த விலையில் தரமான பொருட்களை உருவாக்கலாம் என தெரிய வந்தது. மும்பையில் உள்ள “பைசஸ்போர்டு” என்ற நிறுவனம் ஏலக்காயை தமிழ் நாடு, கேரளாவில் இருந்தும், முந்திரி பருப்பை கேரளாவில் இருந்தும் நேரடியாக கொள்முதல் செய்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

அந்த நிறுவனம் மூலம் இந்த பொருட்களை வாங்கவும் ஆந்திர அரசு நிறுவனமான விஜயா டைரி மூலம் நெய் வாங்கவும் தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. அதே போல் சர்க்கரையை உற்பத்தி செய்யும் ஆலையில் இருந்து நேரடியாக பெறவும் திட்டமிடப்பட்டது.

இதன் மூலம் செய்யும் லட்டு தரமானதாகவும், சுவையானதாகவும் இருக்கும் என்று கோவில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் கூறினார். தற்போது விற்கும் விலையில் ஒரு லட்டு எடை 800 கிராம் இருக்கும் வகையில் கண் காணிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments: