Monday, April 18, 2011

தமிழ் பெண்கள் கற்பழிப்பு, படுகொலை: இலங்கை இறுதி போரில் சிங்கள வீரர்கள் அட்டூழியம்; ஐ.நா. விசாரணை குழு பரபரப்பு அறிக்கை.

தமிழ் பெண்கள் கற்பழிப்பு, படுகொலை:    இலங்கை இறுதி போரில் சிங்கள வீரர்கள் அட்டூழியம்;     ஐ.நா. விசாரணை குழு பரபரப்பு அறிக்கை

இலங்கை இறுதி போரில் போர் குற்றம் நடந்ததா? என கண்டறிய ஐ.நா.சபை 7 பேர் குழுவை அமைத்தது. இந்தோனேசியா முன்னாள் அட்டர்னி ஜெனரல் மார்சுகி டருஷ்மன், தென் ஆப்பிரிக்க மனித உரிமை அமைப்பு பிரதிநிதி யாஸ்மின் சோஜா, அமெரிக்க வக்கீல் ஸ்டீபன் ரட்னா ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்று இருந்தனர். அவர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விரிவாக விசாரணை நடத்தினார்கள். 2008-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2009-ம் ஆண்டு மே மாதம் வரை நடந்த சம்பவம் பற்றி விசாரிக்கப்பட்டன. அவர்கள் விசாரணையை முடித்து 196 பக்கம் கொண்ட அறிக்கை ஒன்றை தயாரித்து உள்ளனர்.

இந்த அறிக்கை இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில் இலங்கை ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் இருதரப்பினருமே போர் விதிமுறைகளை மீறினார்கள். இருதரப்பும் போர் குற்றங்களை செய்தன என்று கூறப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*இறுதிப் போரின்போது ஒரே இடத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்கள் தப்பி செல்ல முடியாமல் குவிந்து இருந்தனர். அவர்கள் உயிரைப்பற்றி கவலைப் படாமல் இலங்கை ராணுவம், விடுதலைப்புலிகள் இரு தரப்பினரும் தாக்கினார்கள்.

*இரு தரப்பினரும் நடத்திய தாக்குதலில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

*தாக்குதல் நடத்தப்படாத இடம் என அறிவித்து விட்டு அந்த பகுதிகளிலும் குண்டு வீசினார்கள்.

*போரில் தடை செய்யப்பட்ட குண்டுகளும், ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டன. மக்கள் உயிரிழப்பை பற்றி கவலைப்படாத அரசு குண்டு வீச்சை ஊக்கப்படுத்தியது.

*ஐ.நா. சபை, செஞ்சிலுவை சங்கம் ஆகியவை பொதுமக்களுக்கு உதவி செய்ய விடாமலும், சிகிச்சை அளிக்கவிடாமலும் ராணுவம் தடுத்து விட்டது.

*அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் பெரிய குண்டுகளை வீசி தகர்த்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மருத்துவ வசதிகளும் செய்யப்படவில்லை.

*போரில் நடக்கும் சம்பவங்கள் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதால் பத்திரிகை நிருபர்கள் அங்கு செல்லவிடாமல் தடுக்கப் ட்டனர். பொதுமக்கள் இறப்பு குறித்து விமர்சனம் செய்தவர்கள் கடத்தப்பட்டனர். மிரட்டப்பட்டனர்.

* ராணுவம் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

*இரு தரப்பினரும் நடத்திய தாக்குதலில் சிக்கி கொண்டு பொதுமக்கள் பெரும் துயரங்களை சந்தித்தனர். பெண்கள், குழந்தைகள் பெரும் இன்னல்களுக்கு ஆளானார்கள்.

*ஏராளமான தமிழ் பெண்களை சிங்கள ராணுவத்தினர் கற்பழித்தனர். அவர்கள் பலர் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் சிலரை ராணுவத்தினர் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை கொன்றனர்.

*போர் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை குறுகிய பகுதிகளுக்குள் அடைத்து வைத்தனர். அங்கிருந்த பெண்களும் கற்பழிக்கப்பட்டனர்.

* வெளியே வந்த மக்களை விடுதலைப் புலிகள்தானா? என கண்டறிய எந்த அளவு கோளையும் வைக்கவில்லை. சந்தேகப்பட்ட அனைவரையும் அழைத்து சென்று சித்ரவதை செய்தனர். அவர்களில் பலர் கொல்லப்பட்டனர். பலர் காணாமல் போனார்கள்.

*போர் பகுதிகளில் இருந்த மக்களை வெளியேற விடாமல் விடுதலைப்புலிகள் தடுத்தனர்.

*விடுதலைப்புலிகள் என சந்தேகப்பட்ட நபர்களை ராணுவத்தினர் ரகசிய இடத்துக்கு அழைத்து சென்றனர். அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை.

* போரில் தப்பி வந்த மக்களுக்கு போதிய வசதி செய்து தராமல் கடும் கஷ்டங்களை கொடுத்தனர். சித்ரவதைகளும் நடந்தன.

* போரில் காயம் அடைந்து வெளியே தப்பி வந்தவர்களுக்கும் உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட வில்லை.

*ராணுவ நீதிமன்றங்கள் ராணுவத்தினர் அத்துமீறல் தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தவில்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்து என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. குழு சில பரிந்துரைகளை செய்துள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* போர் குற்றங்கள் நடந்தது உறுதிபடுத்தப்பட்டு இருப்பதால் சர்வதேச அமைப்பு மூலம் முழு விசாரணை நடத்த வேண்டும்.

* போரில் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அரசாங்கம் தனது வன்முறை செயலை நிறுத்த வேண்டும்.

* பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்க வேண்டும்.

*காணாமல் போனவர்கள் பற்றி அரசு உரிய தகவலை வெளியிட வேண்டும். இல்லை என்றால் இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும்.

*கைது செய்து வைத்துள்ள விடுதலைப்புலிகள், மற்ற நபர்கள் பற்றிய முழு விவரத்தை வெளியிட வேண்டும்.

*இலங்கையில் அமைதியும், சமாதானமும் ஏற்பட அனைத்து நடவடிக்கை களையும் ஐ.நா.சபை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட பரிந்துரைகள் செய்யப்பட்டு உள்ளன.


No comments: