Monday, April 18, 2011

அசன்அலி கான் பாஸ்போர்ட் விவகாரம் , மருத்துவக் கல்லூரி-குருத்வாரா: புதுவை கவர்னர் மீது குவியும் புகார்கள்.


பல லட்சம் கோடி ஹவாலா மோசடியில் கைதாகி சிறையில் உள்ள அசன் அலி கானுக்கு பாஸ்போர்ட் பெற்றுத் தந்த விவகாரத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று தெரிகிறது.

இதே விவகாரத்தில் தொடர்புடைய உத்தரப் பிரதேச மாநில முதன்மைச் செயலாளர் விஜய்சங்கர் பாண்டேவை பதவி நீக்கம் செய்து அம் மாநில முதல்வர் மாயாவதி உத்தரவிட்டுள்ள நிலையில், இக்பால் சிங்கிடம் மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது.

சுவிஸ் உள்பட பல வெளிநாட்டு வங்கிகளில் இவர் பல லட்சம் கோடியளவுக்கு பணத்தை ரகசியமாக முதலீடு செய்துள்ளார் அசன் அலி. இது குறித்து மத்திய கணக்கு தணிக்கைத் துறை, அமலாக்கப் பிரிவு, சிபிஐ, வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அலி மற்றும் அவரது பார்ட்னரான காசிநாத் தபுரியாவும் ஆகியோர் ரூ. 75,000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இவருக்கும் தாதா தாவூத் இப்ராகிமுக்கும் தொடர்பு உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

இந் நிலையில் அசன் அலி மற்றும் தபுரியா இருவரையும் கடந்த மாதம் அமலாக்கப் பிரிவினர் கைது செய்தனர். அவர்களிடம் இன்று வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே பிகார் மாநில ராஜ்யசபா எம்பியாக இருந்தபோது அசன் அலிக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றுத் தந்ததாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங் மீது அமலாக்கப் பிரிவு புகார் கூறியுள்ளது. பிகாரைச் சேர்ந்த அமலேந்து பாண்டே என்பவர் மூலமாக அலிக்கு இக்பால் சிங் உதவியதாகக் கூறியுள்ள அமலாக்கப் பிரிவினர் இது தொடர்பாக இக்பால் சிங்கிடம் விசாரணை நடத்த ஜனாதிபதி பிரதீபா பாட்டீலிடம் அனுமதி கோரியுள்ளனர்.

இந் நிலையில் இக்பால் சிங் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து விளக்கம் அளித்தார். அதில், 1992 முதல் 1998ம் ஆண்டு வரை 6 ஆண்டு காலத்துக்கு பிகார் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக பொறுப்பு வகித்தபோது அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக இருந்த அமலேந்து பாண்டே பாஸ்போர்ட் பெறும் ஒரு விண்ணப்பம் அனுப்பினார். தனக்கு மிகவும் வேண்டியவர் மருத்துவ சிகிச்சைக்கு சிங்கப்பூருக்கு செல்ல வேண்டி இருப்பதால் பாஸ்போர்ட் கிடைக்க ஏற்பாடு செய்ய கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

அந்த விண்ணப்பத்தில் ஏ.கான் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த பாஸ்போர்ட் விண்ணப்பத்தை உடனடியாக அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஐ.கே.குஜ்ராலுக்கு அனுப்பி பாஸ்போர்ட் கிடைக்க ஏற்பாடு செய்தேன்.

ஆனால் அமலேந்து பாண்டே தற்போது மாற்றி பேசுகிறார். அவர் சொல்வதில் எந்த உண்மை இல்லை. அசன் அலி யார் என்றே எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

இந் நிலையில் கவர்னரின் செயலாளர் ஜே.பி.சிங் டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையில், இக்பால் சிங் தனது சொந்த வேலை காரணமாக டெல்லி வந்துள்ளார். அவருக்கு எந்த சம்மனும் வரவில்லை. கவர்னருக்கு சம்மன் அனுப்பப்பட வேண்டுமானால் மத்திய உள்துறை மூலம்தான் அனுப்ப முடியும். கவர்னர் இக்பால் சிங்குக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை. அதில் எந்த உண்மையும் இல்லை என்றார்.

அதிமுக கூறும் புதிய புகார்கள்:

இந் நிலையில் இக்பால் சிங் மீது அதிமுக புதிய புகாரைக் கூறியுள்ளது. அம் மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், காரைக்காலில் கவர்னரின் உறவினர்கள் மருத்துவக் கல்லூரி தொடங்க அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் அனுமதி வழங்கியுள்ளார். மிக மிக சொற்ப எண்ணிக்கையில் வாழும் சீக்கிய மக்களுக்கு குருத்வாரா கட்ட 40 ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கியுள்ளார் என்றார்.

முதல்வரிடம் சோனியா விசாரணை:

இதற்கிடையே அதிமுகவின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க காங்கிரஸ் தலைமை, முதல்வர் வைத்திலிங்கத்தை டெல்லிக்கு அழைத்தது. இதையடுத்து நேற்று வைத்திலிங்கம் டெல்லி சென்றார். இன்று காலை சோனியாவை சந்தித்த அவர் கவர்னர் மீது எழுந்துள்ள நில விவகார புகார் தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனும் உடன் இருந்தார்.

மேலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்பது தொடர்பாகவும் சோனியா கேட்டறிந்தார்.


No comments: