Monday, April 18, 2011

கேட்பாரின்றி கிடக்கும் ரூ 49 கோடி.


தமிழகத்தில் வாகன சோதனையின் போது பிடிபட்ட ரூ 49 கோடி இன்னும் அப்படியே உள்ளதாகவும், இந்தப் பணத்துக்கான ஆதாரமிருப்போர் வந்து அதைக் காட்டிப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்தது. வாகனங்களில் பணம் கொண்டு போவதை தடுக்க தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப் பட்டன. பறக்கும் படை, வருமான வரித்துறை அதிகாரிகள் மூலமும் திடீரென சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த அதிரடி சோதனையின்போது, வாகனங்களில் கொண்டு போகப்பட்ட பணம் கட்டுக்கட்டாக பிடிபட்டது. வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக சிலர் கொண்டு சென்ற பணமும் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டன.தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, தமிழ்நாடு முழுவதும் நடந்த சோதனையில் மொத்தம் 54 கோடியே 17 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த பணம் அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.29 கோடியே 87 லட்சம் ரூபாயை பறக்கும் படை கைப்பற்றியது. ரூ.15 கோடியே 6 லட்சம் வருமானவரி அதிகாரிகள் சோதனையில் சிக்கியது. ரூ.9 கோடியே 24 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் ஆணைய நடவடிக்கைமூலம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.5 கோடி மட்டும் உரிய ஆவணங்களை காட்டி அதன் உரிமையாளர்கள் திரும்ப பெற்றுள்ளனர். மொத்தம் பறிமுதல் ஆன ரூ.54.17 கோடியில் ரூ.49.17 கோடியை வாங்கிச் செல்வதற்காக இதுவரை யாரும் வரவில்லை.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறுகையில், "பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு சரியான ஆவணங்களை காட்டி ரூ. 5 கோடியை மட்டும் தேர்தலுக்கு முன்பு சிலர் திரும்ப பெற்றுள்ளனர். வருவதாகக் கூறிச் சென்ற பலர் இன்னும் வந்து பணத்தை வாங்கவில்லை. இவை கணக்கில் காட்டப்படாத கறுப்பு பணமாக இருக்கலாம். வருமான வரி செலுத்தியதற்கான ஆவணம் மற்றும் ஆதராம் இருப்பவர்கள் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்," என்றார்.


No comments: