தீவிரவாதத்தை ஒழிப்போம் என்று வாய் கிழியப் பேசும் மத்திய அரசு, 3 நாட்கள் மும்பையில் கொலை வெறியாட்டம் நடத்திய கசாப்பை இன்னும் தூக்கிலிடாமல், சாப்பாடு போட்டு, மக்கள் வரிப்பணத்தை கோடி கோடியாக செலவிட்டு பாதுகாப்பாக வைத்திருப்பது மகா அநியாயமான செயல் என்று மும்பை மக்கள் கோபத்துடன் கூறுகின்றனர்.
மும்பையில் நடந்து வரும் தீவிரவாத தாக்குதல்களால் மகாராஷ்டிர மக்களும், மும்பை மக்களும் கடும் விரக்தியில் ஆழ்ந்துள்ளனர். தீவிரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வரும் அதே வேளையில் அதைத் தடுக்க அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் ஈடுபடாதது அவர்களை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு முதல் மும்பையில் 7 முறை தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதத் தாக்குதல்கள் சகஜம் என்று கூறப்படும் காபூல் மற்றும் கராச்சியில் கூட இத்தனைப் பேர் இறந்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு தீவிரவாதிகள் கையில் சிக்கி மும்பை சின்னாபின்னமாகி வருகிறது.
இந்த நிலையில் 2008ம் ஆண்டு பத்து பேருடன் உள்ளே புகுந்து 3 நாட்கள் வெறியாட்டம் போட்ட தீவிரவாதிகளில் உயிருடன் பிடிபட்டவனான கசாப்பை அரசு படு பாதுகாப்போடு வைத்து சாப்பாட்டு போட்டு, மக்கள் வரிப்பணத்திலிருந்து கோடி கோடியாக செலவிட்டு வருவது மும்பை மக்களை கடும் எரிச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது.
சட்ட நடைமுறைகளை விரைவுபடுத்தி அவனை தூக்கில் போடாமல் ஏன் அரசு இப்படி மக்கள் பணத்தை செலவு செய்து, கசாப்பை பாதுகாத்து வருகிறது என்று அவர்கள் குமுறுகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிர முதல்வர் பிருத்வி ராஜ் சவான் கூறுகையில், மக்களுடைய கோபம், ஆதங்கம், கேள்வி உண்மைதான். அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. நிச்சயம் கசாப் தண்டனையை அனுபவித்தாக வேண்டும். ஆனால் நமது சட்ட நடைமுறைகள் மெதுவாகத்தான் உள்ளது. அவசரப்பட முடியாதநிலை உள்ளது என்றார். தொழில்நுட்பம் மாறியாக வேண்டும். அடிப்படைக்கட்டமைப்பு மாறியாக வேண்டும்.கம்ப்யூட்டர்மயமாக்கல் விரைவுபடுத்தப்பட வேண்டும். 21வது நூற்றாண்டில் நாம் மாட்டுவண்டி தொழில்நுட்பத்தை வைத்து செயல்பட முடியாது என்றார்.
ஆனால் எதிர்க்கட்சிகளோ சட்டத்தை கடுமையாக சாடுகின்றன. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறுகையி்ல்,
உலகம் முழுவதும் தீவிரவாதத்திற்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியாவில் மட்டும்தான் இந்த சட்டம் பலவீனமாக்கப்பட்டுள்ளது. அதாவது தீவிரவாதிகள் இங்கு வந்து தாராளமாக தாக்கலாம் என்று அரசே அழைப்பு விடுப்பது போல சட்டம் எளிதாக உள்ளது என்றார்.
No comments:
Post a Comment