Saturday, July 16, 2011

சக்சேனா கேஸில், கத்தி செருகிய தி.மு.க. அமைச்சர் !



டப்பா காலியானாலும், உள்ளே பெருங்காய வாசனை பலமாகத்தான் இருக்கும். கட்சிக்கு அப்படியொரு பெருங்காய வாசனையை காட்டியிருக்கிறார் தி.மு.க. அமைச்சர் பழனி மாணிக்கம் என்று டில்லி வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

தி.மு.க.வுக்கு எதிராகப் பாயும் சட்ட நடவடிக்கைகளின்போது பெரிதாக எந்த உதவியும் செய்ய முடியாது என்ற நிலையில், ஏதோ தனது சக்திக்கு முடிந்தவரை, சிறியதாக ஒரு மின்னல் கீற்று காட்டியிருக்கிறார் அவர் என்கிறார்கள்.

சன் பிக்சர்ஸ் சக்சேனா தொடக்கத்தில் கைதாகக் காரணமாக இருந்தது, சேலம் செல்வராஜ் என்பவர் கொடுத்த புகார்தான். அதைத் தொடர்ந்துதான் மற்றைய சினிமாப் புள்ளிகள் வெளியே தைரியமாக வந்து புகார் கொடுக்கத் தொடங்கினார்கள்.

இதையெல்லாம் ஆரம்பித்து வைத்த சேலம் செல்வராஜை சும்மா விடலாமா? கட்சியின் கியாதி என்னாவது? நாளைக்கு கட்சியை யார் மதிப்பார்கள்?

இப்படியான பிரஸ்டீஜ் மேட்டரில், அமைச்சர் பழனி மாணிக்கத்துக்கு சென்னை யிலிருந்து உத்தரவு வந்தது என்கிறார்கள் டில்லியில். இந்த மாணிக்கம்தான், மத்திய நிதித்துறையின் இணை அமைச்சர்!

சக்சேனாவில் அடிதடி-மிரட்டல் வழக்குகளில் இருந்து அவரைக் காப்பாற்ற மத்திய நிதியமைச்சால் முடியாது. கிரிமினல் வழக்குக்கும் நிதி அமைச்சுக்கும் சம்மந்தமில்லை. ஆனால், நிதி அமைச்சுடன் சம்மந்தமுடைய வேறு ஏதாவது ஒன்றைப் பற்றிக் கொண்டு, இன்டைரக்டாக இதற்குள் வருவதற்கு, நம்மாட்களுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்?

சாமர்த்தியமாக, அந்த ரூட்டில் வந்து சேர்ந்தார் பழனி மாணிக்கம் என்பதே பேச்சாக இருக்கின்றது!

இவரது துறையின்கீழ்தான் வருமான வரி இலாகா வருகின்றது. பொதுவாக சினிமாக்காரர்களை எடுத்துக் கொண்டால், வருமானவரி இலாகாவின் ‘கோ-பை-த-புக்’ நடைமுறைகளை 100% பின்பற்றும் ஆட்களை விரல்விட்டு எண்ணலாம். (ஒரு கை போதும்)

இந்த வசதியை வைத்துக்கொண்டுதான், செல்வராஜ்மீது வருமானவரித் துறையின் ரெய்டுக்கு உத்தரவு கொடுக்க வைத்தார் அமைச்சர்.

செல்வராஜின் வீடு பிருந்தாவனம் ரோட்டில் உள்ளது. அலுவலகம், சினிமா நகரில் உள்ளது. இந்த இரண்டு இடத்திலும் ஒரே நேரத்தில் புகுந்த வருமான வரித்துறை அதிகாரிகள், அங்கிருந்த சில ஆவணங்களை எடுத்துப் போயிருக்கிறார்கள். இனி, அந்த ஆவணங்களில் உள்ள கணக்கு வழக்குகளை வைத்துக் குடைச்சல் கொடுக்க முடியும்.

செல்வராஜின் வீட்டில் ரெயிட் ஒருபக்கமாக நடந்து கொண்டிருந்தபோது, வந்திருந்த வருமானவரித்துறை அதிகாரிகளில் ஒருவர், “நீங்களே வருமானவரி சம்மந்தமான சிக்கல்களை வைத்துக்கொண்டு, எதற்காக சக்சேனாமீது புகார் கொடுக்கப் போனீர்கள்? பேசாமல் உங்க பிசினெஸைப் பார்த்துக்கொண்டு இருந்திருந்தால், நாங்களெல்லாம் ஏன் இங்கே வரப்போகிறோம்?” என்று அட்வைஸ் கொடுத்ததாகத் தகவல்.

சரி. சக்சேனாமீது புகார் கொடுத்தவர் காரணத்தால், தனது துறையைப் பயன்படுத்தி செல்வராஜ் வீட்டில் ரெயிட் நடாத்திய அமைச்சருக்கு, டில்லியில் சிக்கல் வராதா? நாளைக்கே இந்த விஷயம் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்டால், நிதியமைச்சு நடவடிக்கை எடுக்காதா?

‘ஜெயிலில் 50வது நாள்’ கேடயமும் வழங்குவார்களா?

இந்தக் கேள்விகளுடன், நிதியமைச்சில் எமக்குத் தெரிந்த உயரதிகாரி ஒருவரை அணுகியபோது, அவர் கடகடவென்று சிரித்தார்.

“வருமானவரித்துறையில் இதெல்லாம் கோலிகுண்டு விவகாரம். ரெயிட் என்பது, கோர்ட்டில் பதிவாகும் வழக்கு அல்ல. வருமானவரித்துறைக்கு சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட ஒரு நடைமுறை அது. அதற்கான புரொஸீச்சர்களை சரியாகப் பின்பற்றினால், அதில் அமைச்சிலுள்ள யாரையும் மாட்டிவிட முடியாது.

புரொஸீச்சர் என்ன? சம்மந்தப்பட்ட நபரின்மீது வருமானவரித்துறை டைரக்டரின் முகவரியிட்ட ஒரு புகார் கடிதம் வேண்டும். ரெயிடு செய்யப்பட வேண்டிய நபரின் 2009ம் ஆண்டு வருமானவரிக் கணக்கில் காட்டப்பட்ட சோர்ஸ் ஆஃப் இன்கம்முக்கும், 2010ம் ஆண்டுக் கணக்கில் காட்டப்பட்டதற்கும் இடையே, ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாத ஓரிரு பதிவுகள் இருக்க வேண்டும். அவ்வளவுதான் தேவை.

அமைச்சர் நினைத்தால், மிகச் சுலபமாக சென்னையிலிருந்து யாரோ ஒருவரின் பெயரில் புகார் கடிதம் அனுப்புமாறு செய்திருக்க முடியும். சினிமாக்காரர்களில் சோர்ஸ் ஆஃப் இன்கமில், வருடத்துக்கு வருடம் நிச்சயம் சம்மந்தமில்லாத பதிவுகள் இருக்கும். செட்டப் புகார் லெட்டரின் பிரதியையும், இரண்டு வருட டாக்ஸ் ரிடர்ன் பிரின்ட்-அவுட்டையும் ஒரு பைலில் போட்டுக்கொண்டு, ரெயிட் உத்தரவில் கையெழுத்து போட்டு சென்னை அலுவலகத்துக்கு அனுப்பி விடலாம்.

ரெயிடில் சில ஆவணங்களை எடுத்துவந்து, ஆராயலாம். தேவைப்பட்டால், நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். கணக்குகளில் சிக்கல் இல்லாவிட்டால், சம்மந்தப்பட்ட பார்ட்டிக்கு ஒரு லெட்டர் அனுப்பி விடலாம் – “இதனால் தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருமானவரித்துறை மனம் வருந்துகிறது”

இதில் அமைச்சரையும் சிக்கவைக்க முடியாது. கையெழுத்திட்ட டைரக்டரையும் சிக்கவைக்க முடியாது” என்று விளக்கமாகச் சொன்னார் அந்த உயரதிகாரி.

இந்த ரெயிட் பெரிய விஷயமில்லைத்தான். ஆனால், சக்சேனாவுக்கு எதிராக புகார் கொடுக்க நினைக்கும் மற்றைய சினிமாப் புள்ளிகளை, ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும். இன்கம்டாக்ஸ் அலுவலக பைலில் தமது பெயர் இடம்பெற்றாலும் பரவாயில்லை என்று, சக்சேனாவுக்கு எதிராக புகார் கொடுக்க, எத்தனை சினிமாக்காரர்கள் முன்வருவார்கள்?

இந்த விஷயத்தில் தி.மு.க. தலைமையைப் பாராட்டத்தான் வேண்டும். ஏனென்றால், தமது கட்சியின் சார்பில் ஒரு முட்டாளை அமைச்சராக டில்லிக்கு அனுப்பவில்லை அவர்கள்!

No comments: