சென்னை-பெங்களூர் தங்க நாற்கர சாலையில் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, பள்ளிகொண்டா, வாலாஜா ஆகிய 3 இடங்களில் சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. பள்ளிகொண்டா மற்றும் வாணியம்பாடி சுங்கச் சாவடியில் வசூல்செய்யும் உரிமத்தை தனியார் நிறுவனம் 30 ஆண்டுகளுக்கு பெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் சுங்க சாவடியில் வாகன நுழைவு கட்டணம் அதிரடியாக பலமடங்கு உயர்த்தப்பட்டது. இதற்கு முன்பு பஸ் ஒன்றுக்கு மாதம் ரூ.4655 மட்டும் செலுத்தினால் அந்த மாதம் முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் சுங்க சாவடி வழியாக சென்று வரலாம் என இருந்துள்ளது.
ஆனால் தற்போது புதிய கட்டண முறைப்படி ரூ.6955-ஐ செலுத்தி விட்டு 50 முறை மட்டுமே சுங்கச் சாவடி வழியாக சென்று வர வேண்டும் என உள்ளதாக தெரிகிறது. இதனால் ஒரு நாளைக்கு சுங்க சாவடியை கடந்த 5 முறை சென்று வந்தாலே 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதாக பஸ் உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் இந்தகட்டண உயர்வை குறைக்க வேண்டும் இல்லை என்றால் பஸ்களை இயக்க மாட்டோம் என அறிவித்து இருந்தனர். அதன்படி 100க்கு மேற்பட்ட பஸ்களை வாணியம்பாடி, பள்ளி கொண்டா சுங்க சவாடி முன்பு நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சுமூகமான நிலை எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் கட்டணத்தை குறைக்கும் வரை பஸ்களை இயக்க மாட்டோம் என உரிமையாளர்கள் கூறினர். 2-வது நாளான இன்றும் பஸ்கள் இயக்கப்படவில்லை.
சுமார் 200-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயங்காததால் வேலூர் மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து முடங்கியது. வேலூரிலிருந்து திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா, குடியாத்தம், ஜோலார் பேட்டை, நாட்டறம்பள்ளி, கிருஷ்ணகிரி, ஆலங்காயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் டாக்டர் கோவிந்ததராஜ் கூறியவதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில் சரியான முறையில் கட்டணம் வசூலித்து வந்தனர். அந்த முறையிலே மீண்டும் கட்டணம் வசூல் செய்ய வேண்டும். கூடுதல் வரி விதிப்பால் தனியார் பஸ்கள், பள்ளி பேருந்துகள் தொழிலாளர்களை ஏற்றி செல்லும் கம்பெனி பஸ்களும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதே போல் கார் மற்றும் வாகனங்களுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். அவர்களும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். பழைய முறையிலேயே கட்டணம் வசூலிக்கும் வரை பஸ்களை இயக்க மாட்டோம். போராட்டம் தொடர்ந்து நடக்கும் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment