Saturday, August 6, 2011

என்ன நாடய்யா இது? வாஷிங் மெஷின் பைசா கொடுத்து வாங்கணுமாம் !



“தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், பிறக்கும்போதே ரூ15,000 கடனுடன் பிறக்கின்றது” இப்படி கூறியவர் வேறு யாருமல்ல, தமிழக முதல்வர் ஜெயலலிதாதான். இந்த வருடத் தொடக்கத்தில் அப்படிக் கூறியிருந்தார். அப்போது தி.மு.க. அரசின் ஆட்சியில் இருந்தது தமிழகம்.

தி.மு.க. அரசு, மொத்த தமிழகத்தையுமே கடனில் மூழ்க வைக்கிறது என்பதுதான் ஜெயலலிதா சொல்ல வந்த சேதி.

அவர் இப்படிக்கூறி 6 மாதங்களுக்குள், ஆட்சி அவரது கையில் வந்து சேர்ந்தது. இன்று தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட அதிக கடன் தொகையுடன் பிறக்கின்றது.

இதைச் சொல்வது நாங்களல்ல. அவரது அரசு இரு தினங்களுக்குமுன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

புதிய அரசு, கடந்த தி.மு.க. அரசு விட்டுச் சென்ற கடன் தொகையையும் சேர்த்து தலையில் சுமக்க வேண்டியுள்ளது என்பது நிஜம்தான். ஆனால், அந்தக் கடன் தொகையை அதிகரிப்பது எதுவென்றால், இவர்கள் மழை போலத் தூவும் ‘இலவசங்கள்!’

ஒரு சாம்பிளுக்குப் பாருங்கள். இலவச பேன், மிக்ஸி, கிரைன்டர் வழங்கும் திட்டத்துக்கு ரூ1,250 கோடி. சூரிய சக்தியுடன் கூடிய வீடுகளை அமைத்துக் கொடுக்க ரூ1,080 கோடி. மாணவர்களுக்கு ரூ394 கோடி. தாலிக்குத் தங்கம் ரூ514 கோடி. இந்த லிஸ்ட் இத்துடன் நிற்கவில்லை. இலவச கறவைப் பசு, வெள்ளாடு என்று அதுபாட்டுக்கு நீண்டுகொண்டே போகிறது.

2011-12 பட்ஜெட் காலப்பகுதியில் தமிழக அரசு கடன் வாங்க வேண்டிய தொகை ரூ1.01 லட்சம் கோடி என்று தி.மு.க. ஆட்சியின்போது கணிப்பிடப்பட்டிருந்தது. தமிழக அரசின் புதிய பட்ஜெட், அந்தத் தொகையை 1.19 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது.

தி.மு.க. அரசு இலவச டி.வி. கொடுத்ததை கிண்டலடித்த இவர்கள், இலவச கிரைண்டர் கொடுக்கிறார்கள். அவர்கள் ஒரு ரூபாவுக்கு அரிசி கொடுத்தால், இவர்கள் இலவசமாகவே கொடுக்கிறார்கள். அடுத்தது என்ன? இலவச பிரியாணியா?

ஒவ்வொரு ஆட்சியிலும் மாறிமாறி இதுவே தொடர்ந்தால் என்னாகும்? முதல்வர் ஜெயலலிதாவின் ‘பிறக்கும் குழந்தை’ உதாரணத்தையே நாமும் சொல்லிப் பார்க்கலாம்.

அம்மா ஆட்சியில் தமிழகத்தில் பிறந்த குழந்தை, வளர்ந்து பெரியவனாகி அமெரிக்கா சென்றால், அமெரிக்க அரசைப் பார்த்து வாய்விட்டுச் சிரிக்கும்! “என்ன நாடய்யா இது? வாஷிங் மெஷின் பைசா கொடுத்து வாங்கணுமாம்!”

No comments: