Sunday, July 10, 2011

தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல் !தயாநிதி மாறனின் மத்திய அமைச்சர் பதவி, இன்னமும் சில நாட்கள் நீடித்திருக்கக்கூடும். அப்படி நீடிக்காமல், அவசர அவசரமாக கடந்த வியாழக் கிழமையே ‘மங்களம்’ பாடவேண்டி வந்ததற்கு சில காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று, கனிமொழியில் வக்கீல் எடுத்து வைத்த வாதம் என்று இப்போது தெரியவந்துள்ளது.

சி.பி.ஐ. தனி கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு நடந்து வருகின்றது. இதில் கைதான யாருக்குமே ஜாமீன் வழங்கப்படவில்லை. ஆனால், அவர்களுக்கு எதிரான முழுமையான குற்றப் பத்திரிகையும் இன்னமும் தாக்கல் செய்யப்படவில்லை. வெறும் Preliminary அறிக்கை ஒன்றை வைத்தே சி.பி.ஐ. விளையாடிக் கொண்டிருந்தது.

இந்த விஷயத்தை கனிமொழியின் வக்கீல், அடிக்கடி நீதிபதிக்கு சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தார்.

அப்படியிருந்தும் சி.பி.ஐ. முழுமையான குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யாத நிலையில், கடந்த 5-ம் தேதி சி.பி.ஐ.யை நீதிபதி சைனி பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டார். “குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும், ஏன் முழுமையான குற்றப் பத்திரிகையை நீங்கள் தாக்கல் செய்யவில்லை?” என்று கேட்டார் அவர்.

அதற்கு சி.பி.ஐ.யின் வக்கீல், “வேறு சில முக்கிய சம்பவங்களையும் நாம் குற்றப் பத்திரிகையில் இணைக்க வேண்டியுள்ளது. அதற்கான சாட்சியங்கள் தற்போது பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதனால்தான் தாமதம்” என்றார்.

இந்தப் பதிலுடன் நீதிபதி திருப்தியடையவில்லை. சி.பி.ஐ.யின் வக்கீலைப் போட்டுக் குடைந்து தள்ளிவிட்டார்.

“நீங்கள் குற்றப் பத்திரிகையைத் தாமதிப்பதைப் பார்த்தால் வேறு உள்நோக்கம் இருப்பது போன்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கைது செய்யப்பட்டுள்ள 14 பேரையும், தொடர்ந்து சிறையில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் உங்களது விருப்பமா? அதற்காகத் தாமதம் செய்யப்படுகின்றதா?”

“இல்லை. ஆவணங்கள் முழுமையடையவில்லை. புதிய தகவல்கள் சேர்க்கப்படவுள்ளன”

இந்த இடத்தில் குறுக்கிட்ட கனிமொழியின் வக்கீல், “எனது கட்சிக்காரருக்கு (கனிமொழி) அவரைக் கைது செய்வதற்கு என்ன காரணம் என்று ஆதாரம் காட்டும் சப்போர்ட்டிங் டாக்குமென்ட் ஏதும் வழங்கப்படவில்லை என்று ஞாபகப் படுத்துகிறேன்” என்று, கத்தி செருகினார்.

சி.பி.ஐ. வக்கீலின் பக்கமாகத் திரும்பிய நீதிபதி, “அந்த ஆவணங்கள் எங்கே?” என்றார். “ கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய ஆவணங்கள் சரியாக இருந்த காரணத்தால் அல்லவா அவர்களை கைது செய்தீர்கள்? அந்த ஆவணங்கள் எங்கே? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அந்த ஆவணங்களை ஏன் இதுவரை நீங்கள் கொடுக்கவில்லை?”

“அந்த ஆவணங்களை ரிலீஸ் செய்தால், அதிலுள்ள விபரங்களை வைத்து சிலர் உஷாராகி விடுவார்கள் என்ற ப்ரீ-காஷனில்தான் அவை வழங்கப்படவில்லை”

“அந்த ‘சிலர்’ கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள 14 பேரில் இருக்கிறார்களா?”

இதற்கு பதில் சொல்ல சில விநாடிகள் எடுத்துக்கொண்ட சி.பி.ஐ. வக்கீல், “இல்லை. வெளியே இருக்கிறார்கள். அவர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை” என்றார்.

“அப்படியானால், அவர்கள் மீது ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை?” என்று கேட்டார் நீதிபதி சைனி.

இதற்கு சி.பி.ஐ. வக்கீலிடமிருந்து பதிலில்லை.

அதையடுத்து நீதிபதியிடமிருந்து உஷ்ணமான வார்த்தைகள் வந்து விழுந்தன. “இது ஒரு விதிமுறைகளுக்கு உட்பட்ட சட்ட நடைமுறை. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சட்டப்படி வழங்கப்படவேண்டிய ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும். அல்லது அந்த ஆவணங்கள் ரெடியாகும் வரை அவர்களை சிறையில் வைத்திருக்க முடியாது. அதற்கு மேலும் நீங்கள் தாமதம் செய்தால், கோர்ட் கடுமையாக நடந்துகொள்ள வேண்டியிருக்கும். சி.பி.ஐ-க்கு அபராதம் விதிக்க வேண்டி வரும்!” என்றார்.

இதைக் கேட்ட சி.பி.ஐ. தரப்பு, ஆடிப்போனது. நிலைமை சிக்கலாகுவதைப் புரிந்துகொண்டு மறுநாளே புதிய ப்ரீலிமினரி டிராஃப்ட் ஒன்றைத் தாக்கல் செய்தது.

இப்படி, மறு நாள் சி.பி.ஐ.யால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில், ‘வெளியே இருக்கும்’ நபர் ஒருவரின் பெயரும் சேர்க்கப் பட்டிருந்தது.

அந்தப் பெயர்-

‘மத்திய அமைச்சர்’ தயாநிதி மாறன்!

சி.பி.ஐ.யின் இந்தக் குற்றப் பத்திரிகையில் தயாநிதி மாறனின் பெயர் இணைக்கப்பட்ட பின்னர்தான், தொடர்ந்தும் அவரை அமைச்சர் பதவியில் வைத்திருக்க முடியாத நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டது. தயாநிதியின் பதவி பறிபோனது!

கனிமொழியில் வக்கீல் பிரஷர் கொடுக்காமல் இருந்திருந்தால், தயாநிதியின் பெயரை அவசர கதியில் உள்ளே கொண்டுவந்திருக்காது சி.பி.ஐ.! இன்னமும் சில நாட்களுக்காவது தயாநிதியின் அமைச்சர் பதவி நிலைத்திருக்கலாம்.

சரி. கனிமொழியின் வக்கீல் இந்த மூவை ஏன் செய்தார்? பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காகிப் போனதா? அல்லது.. அல்லது.. வேண்டுமென்றே தயாநிதியின் பதவிக்கு சங்கு ஊதினாரா?

viruvirupu.com

1 comment:

Rex Arul said...

"யாம் பெற்ற (திகார்) இன்பம், பெறுக இவ்வையகம்" என்ற philanthropic attitude ஆக கூட இருக்கலாமே? இல்லையா?