Friday, May 27, 2011

ஐஎஸ்ஐயிடம் 50 முறை பயிற்சி பெற்றேன் - ஹெட்லி தகவல்.


பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தனக்கு 50 முறை பயிற்சி கொடுத்ததாக தீவிரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லி கூறியுள்ளான்.

சிகாகோவில் வைத்து கைதானவன் பாகிஸ்தானிய அமெரிக்கரான ஹெட்லி. இவன் மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் முக்கியத் தொடர்புடையவன். இவன்தான் லஷ்கர் இ தொய்பா அமைப்புக்காக, மும்பைக்கு வந்து தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களை முன்கூட்டியே வேவு பார்த்து தாக்குதலைத் திட்டமிட பேருதவி புரிந்துள்ளான்.

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ்ஐயும்தான் திட்டமிட்டதாகவும், லஷ்கர் இ தொய்பாவுக்காக இவை முழு ஒத்துழைப்பையும், உதவிகளையும் வழங்கியதாகவும் ஹெட்லி கூறியுள்ளான்.

சிகாகோ கோர்ட்டில் தற்போது வாக்குமூலம் அளித்து வருகிறான் ஹெட்லி. அவன் வெளியிட்டு வரும் ஒவ்வொரு தகவலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ்ஐயும் எந்த அளவுக்கு செயல்பட்டன, என்னென்ன சதிச் செயல்களைச் செய்தன என்பதை அம்பலப்படுத்தி வருகிறான் ஹெட்லி.

சிகாகோ கோர்ட்டில் நேற்று அவனிடம் அரசுத் தரப்பு அட்டர்னி சார்லஸ் ஸ்விப்ட் விசாரணை நடத்தினார். அப்போது ஹெட்லி கூறியதாவது:

மும்பை தாக்குதல் சம்பவம் நடந்த இடங்களை எப்படிக் கண்காணிப்பது, எப்படி உளவு பார்ப்பது என்பது தொடர்பாக எனக்கு ஐஎஸ்ஐதான் முழு பயிற்சியையும் அளித்தது. கிட்டத்தட்ட 50 முறை இந்தப் பயிற்சிவகுப்பில் நான் கலந்து கொண்டேன்.

எனக்காகவே சிறப்பு பயிற்சிகளைக் கொடுத்தது ஐஎஸ்ஐ. ஐஎஸ்ஐயைச் சேர்ந்த மேஜர் இக்பால் எனக்கு பயிற்சிகளைக் கொடுத்தார். லாகூர் தெருக்களில் நடந்தபடியும், அங்குள்ள விமான நிலையத்திற்கு அருகே உள்ள 2 மாடி வீடு ஒன்றில் வைத்தும் என இந்த பயிற்சி தரப்பட்டது.

நான் 2006ம் ஆண்டு மேஜர் இக்பாலை சந்தித்தபோது, ராணுவமும், லஷ்கர் இ தொய்பாவும் எனக்கு முன்பு கொடுத்த பயிற்சிகள் குறித்து அவர் அதிருப்தி வெளியிட்டார். போதிய பயிற்சி தரப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

மிகவும் பூர்வாங்க பயிற்சியையே நீ பெற்றுள்ளாய் என்று கூறிய அவர், எனக்கு நிறைய ஆலோசனைகளையும், குறிப்புகளையும் வழங்கினார். எப்படி வேவு பார்ப்பது என்பது தொடர்பாக நிறைய தகவல்களை அவர் எனக்குக் கொடுத்தார் என்றான் ஹெட்லி.

அமெரிக்க உளவாளியாகவும் இருந்தேன்

இந்த விசாரணையின்போது தான் அமெரிக்க அரசின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உளவாளியாகவும் பணியாற்றியதாக ஒப்புக் கொண்டான் ஹெட்லி.

சிகாகோவில் ஹெட்லி கைதானபோது உடன் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய கனடியரான தஹவூர் ராணா தொடர்பான வழக்கில்தான் தற்போது ஹெட்லி சாட்சியம் அளித்து வருகிறான். ராணாவும், மும்பை தாக்குதல் வழக்கில் ஒரு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை தாக்குதல் வழக்கில் தான் தொடர்பு கொண்டிருப்பதையு்ம், அந்த குற்றச் செயலில் தனக்கும் பங்கு இருப்பதையும் ஏற்கனவே ஹெட்லி ஒப்புக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனக்கு மரண தண்டனை கிடைக்காமல் தப்பிக்க ராணாவுக்கு எதிராக சாட்சியம் அளிக்கவும் அவன் முன்வந்து தற்போது சாட்சியம் அளித்து வருகிறான் என்பதும் நினைவு கூறத்தக்கது.

No comments: