Friday, May 27, 2011

நான் எழுதிய பாடலை எடுத்து விட்டு சமச்சீர் கல்விப் புத்தகத்தை வெளியிடலாமே? - கருணாநிதி.


நான் தொகுத்து எழுதிய பாடலை முழுமையாக எடுத்துவிட்டு சமச்சீர் கல்விக்கான புத்தகத்தை வெளியிடுவதில் தவறு ஒன்றுமில்லையே? என்று கூறியுள்ளார்

இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

2006ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று அறிவித்ததற்கு இணங்க 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறைச் சட்டம் இயற்றப்பட்டது.

முனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையிலான ஒருநபர் குழுவின் ஆய்வறிக்கை, இதனைத் தொடர்ந்து கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு கல்வியாளர்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்து அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது.

இந்தச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

சமச்சீர் கல்வி சட்டத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக 2010-11ம கல்வியாண்டில் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, பாடப்புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டு மாணவர்கள் படித்து முடித்துள்ளனர்.

அரசின் கொள்கை முடிவின்படி 2011-12ம் ஆண்டு முதல் எஞ்சிய வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த ஏதுவாக ரூ.200 கோடி செலவில் பாடப்புத்தங்கள் அச்சடிக்கப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன.

கல்வியிலும் சமத்துவத்தை நிலைநாட்ட திமுக அரசால் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி முறையை அதிமுக அரசு திடீரென்று கிடப்பில் போடப்போவதாக அறிவிப்பதும், ரூ.200 கோடிக்கு மேல் செலவழித்து தயாரிக்கப்பட்ட புத்தம் புதிய புத்தகங்களை வீணடிப்பதும், மேலும் 200 கோடி ரூபாய் செலவில் புதிய புத்தகங்களை இனிமேல் அவசர அவசரமாகத் தயாரித்து விநியோகிப்போம் என்பதும் சரியான நடைமுறைதானா?

சமச்சீர் கல்வித் திட்ட்த்தை நிறுத்தி வைத்திருப்பது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும், ஆசிரியர்கள், கல்வியாள்ரகள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக அதிமுகவின் தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சமூக நீதியை நிலைநாட்டும் சமச்சீர் கல்வித் திட்டத்தை தள்ளி வைத்திருப்பது கடும் விவாதத்தை எழுப்பியிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், தரமான கல்வியுடன் கூடிய சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்துவோம் என சமத்துவ மக்கள் கட்சியும் அறிக்கை வெளியிட்டுள்ளன.

சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஏற்கனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை அமைச்சரவை கூட்டத்தின் கொள்கை முடிவின் மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக நான் தொகுத்து எழுதிய வாழ்த்துப்பாடல், சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களிலே இடம் பெற்றுள்ளதுதான் தமிழக அரசின் இந்த முடிவுக்குக் காரணமா?

அந்தப் பாடலை நான் தொகுத்து எழுதியது என்பதை எடுத்துவிட்டோ அல்லது அந்தப் பாடலையே முழுமையாக எடுத்துவிட்டு சமச்சீர் கல்விக்கான புத்தகத்தை வெளியிடுவதில் தவறு ஒன்றுமில்லையே? என்று கூறியுள்ளார்.

No comments: