Tuesday, April 12, 2011

சூரியஒளி மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் : அப்துல்கலாம்.


மின் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் சூரியஒளி மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் யோசனை தெரிவித்தார்.

மேல்மருவத்தூர் அடிகளார் திருமண மண்டபத்தில் மாணவர்கள் கலந்துரையாடல் விழா நடந்தது. இதில் சுமார் 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மாணவர்கள் நல்ல ஒழுக்கத்துடன் சிறந்த மாணவர்களாக திகழ வேண்டும். 54 கோடி இளைஞர்களை கொண்ட ஒரே நாடு நம் இந்தியா. மாணவர்கள் எண்ணத்தில் நல்லொழுக்கம் இருந்தால் குடும்பத்தில் அழகு மிளிரும். இதனால் நாட்டில் சீர்முறையும், உலகத்தில் அமைதியும், சாந்தமும் நிலவும் என்றார்.

பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்விக்கு அப்துல்கலாம் பதில் அளித்தார்.

விவசாய நிலங்கள் மனைகளாகவும், தொழில் நகரங்களாகவும் மாற்யூறப்படுகிறதே? என்று ஒரு மாணவர் கேட்டார். அதற்கு அப்துல்கலாம் பதில் அளிக்கையில், இந்தியாவில் கிராமங்களில் இடைவெளி குறைந்து 6,500 கிராமங்கள் நகரமாக வளர்ந்துள்ளது. இல்லாமை இல்லாத நிலை இந்தியாவிற்கு வரவேண்டும். 2020 ம் ஆண்டு நமக்கு 40 கோடி டன் உணவு இருப்பு தேவைப்படுகிறது. அதற்காக நாம் உயர் ரக விதைகள் மூலம் உற்பத்தியை பெருக்கி, உயர்ந்த தொழில்நுட்பம் மற்றும் நவீன முறையிலான தானிய கிடங்குகளை பல மடங்கு உயர்த்த வேண்டும்' என்றார்.

மற்றொரு மாணவி, உங்களின் நிறைவேறாத ஆசை ஏதாவது இருக்கிறதா? என கேட்டதற்கு, இந்தியாவிலுள்ள 100 கோடி மக்களின் முகத்தில் மலர்ச்சி ஏற்பட வேண்டும்'' என்றார்.

மின்சார தட்டுப்பாடு ஏற்பட காரணமும் அதனை சரிசெய்ய எந்த வகையான நடைமுறையை மேற்கொள்ளலாம் என ஒரு மாணவர் கேட்ட கேள்விக்கு, தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் சூரிய ஒளியிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்'' என்று பதில் அளித்தார்.

No comments: