Monday, April 11, 2011

பணம் வாங்கிக் கொண்டு மதிமுகவை வெளியேற்றிய அதிமுக. - நாஞ்சில்சம்பத்.


அதிமுக ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம் வாங்கிக் கொண்டு மதிமுகவை வெளியேற்றியுள்ளது என, மதிமுக கொள்கைப் பரப்பு செயலாளர் நாஞ்சில்சம்பத் கூறியுள்ளார்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வாயு கசிந்தால், அதாவது விஷ வாயு கசிந்தால், தூத்துக்குடி சுடுகாடு ஆகும் அபாயம் உள்ளது. எனவேதான் மதிமுக அந்த ஆலையை மூட வேண்டும் என்று கோரி போராட்டங்கள் பல நடத்திவருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டரீதியாக போராடிக் கொண்டிருக்கிறோம். அந்த ஆலையின் அதிபர் வைகோவை சந்தித்து சரிகட்டிவிடலாம் என்று எண்ணினார். ஆனால் வைகோ அவரை சந்திக்க முன்வரவில்லை. வைகோவின் குரலும், வைகோவின் சகாக்களின் குரலும் சட்டமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என்பதால், அந்த ஆலை அதிபர் அதிமுகவிற்கு பெருந்தொகை கொடுத்து எங்களை கூட்டணியில் இருந்து கழற்றிவிட ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்காக போயஸ் தோட்டத்திற்கு ஸ்டெர்லைட் நிறுவனம் பெருந்தொகை கொடுத்துள்ளது. அவர்களும் அதைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள் என்று வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறேன்.

அதிமுக கூட்டணியில் இணைந்திருந்த எங்களை எந்த காரணமும் இல்லாமல் கழட்டிவிட்ட காரணத்தை இதுவரை ஜெயலலிதா கூறவில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்ய அன்றைய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தவர்தான் ஜெயலலிதா.

ஜெயலலிதாவும், ராஜபக்சேவும் ஒரு நேர்கோட்டில் உள்ளதால் அங்கிருந்தும் பணம் வாங்கியிருக்கிறார்கள்.

எங்களை இழந்தவர்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்படுகிற வகையில் எங்களது தீர்ப்பு இருக்கும். எதை வேண்டுமானாலும் நாங்கள் மன்னிப்போம். துரோகத்தை மன்னிக்க மாட்டோம். துரோகத்தை சாய்ப்பதற்கு எங்கள் தோழர்கள் முடிவு எடுப்பார்கள். என்று நாஞ்சில்சம்பத் தெரிவித்துள்ளார்.

No comments: