Monday, April 11, 2011

வடிவேலுவுக்கு வெடிகுண்டு மிரட்டல் : வேன் மீது கல்வீச்சு : அதிமுக பிரமுகர்கள் கைது.


வடிவேலுவுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிமுக பிரமுகர்கள் கைது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் வடிவேலு ரிஷிவந்தியம் தொகுதியில் பிரச்சாரத்தை முடிக்க திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் கார் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மிரட்டல் குறித்த புகாரை அடுத்து நடிகர் வடிவேலுவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரச்சாரம் தொடர்வது பற்றி திமுக தலைவர் கலைஞருடன் வடிவேலு சிதம்பரத்தில் ஆலோசனை மேற்கொண்டார். வெடிகுண்டு மிரட்டல் குறித்து வடிவேலு செய்தியாளர்களிடம் பேசுகையில், கலைஞர், பொதுமக்கள் தயவால் எனக்கு எந்த பயமும் இல்லை. ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த டெபாசிட் இழப்பார். வெடிகுண்டு மிரட்டலுக்கு ஒருபோதும் பயப்படமாட்டேன். உச்சக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுவேன் என்றார்.

இதனிடையே வடிவேலுவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் கருப்புசாமி, கந்தசாமி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்த இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது


வடிவேலு வேன் மீது கல்வீச்சு: வேட்பாளர் காயம்.


விழுப்புரம் மாவட்டம் அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் வடிவேலு வேன் மீது கல்வீசப்பட்டது. இதில் தடுக்க முயன்ற தி.மு.க., வேட்பாளர் மண்டை உடைந்தது.

திருக்கோவிலூர் தொகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது 10 பேர் கொண்ட கும்பல் செருப்பு மற்றும் கற்களை வீசினர். இதில் வடிவேலுவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. வேட்பாளர் தங்கம் மீது கல்விழுந்ததில் அவரது மண்டை உடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வேட்பாளர் தங்கம் கூறியதாவது, பிரச்சார வேன் மீது திடீரென கல் வீசப்பட்டது. தொடர்ந்து கல் வீசப்பட்டதால் வடிவேலுவுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக அவரை மறைத்து நின்றேன். அப்போது என் மீது கல் பட்டுவிட்டது. இதனால் எனக்கு காயம் ஏற்பட்டுவிட்டது. இதனை தேமுதிகவினர்தான் செய்துள்ளனர். தண்டாச்சிபுரம் என்ற இடத்தில் டீ கடை வைத்துள்ள தேமுதிகவைச் சேர்ந்த அடியாட்கள் 10 பேர் ஒன்றாக கூடிக்கொண்டு கல் மற்றும் செருப்புகளை வீசினார்கள் என்றார்.

இதுகுறித்து வடிவேலு கூறுகையில், இதற்கு எல்லாம் பயந்து நான் பிரச்சாரத்தை நிறுத்தப்போவதில்லை. தோல்வி பயம் காரணமாக எதிரணியினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். குண்டு வீசப்படும் என்று போனில் மிரட்டினார்கள். இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டு. இதுதொடர்பாக போலீசார் மிரட்டல் விடுத்தவரை கைது செய்துள்ளனர் என்றார்.


விஜயகாந்த் சாதாரண அச்சாணி: வடிவேலு
.

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பொன்முடியை ஆதரித்து விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர்,

அ.தி.மு.க. கூட்டணியில் புதியதாக ஒருவரை அந்த கூட்டணியில் சேர்த்து உள்ளார்கள். அவரை கருப்பு எம்.ஜி.ஆர். என்று கூறு கிறார்கள். நான் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

அ.தி.மு.க. மிகப்பெரிய கட்சி எம்.ஜி.ஆரின் உண்மை யான தொண்டர்கள் விஜயகாந்தை ஏற்றுக் கொள்கிறார்களா. நடிப்பதற்கு படம் இல்லை என்பதற்காக கட்சி ஆரம் பித்துவிட்டார். வேட்பாளர்களை அடிக்கக் கூடிய ஒரே தலைவர் விஜயகாந்த்தான்.

எம்.ஜி.ஆருக்கும், விஜயகாந்த்துக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா. என்னைக் கூட வந்த புதிதில் கருப்பு நாகேஷ் என்று கூறினார்கள். ஆனால் நான் அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்று கூறி அப்படியெல்லாம் பெயர் வைக்க கூடாது என்று தெரிவித்தேன். எனக்கு இருக்கின்ற அறிவுகூட உங்களுக்கு இல்லை.

இந்தியாவின் மிகப்பெரிய அரசியல்வாதி கலைஞர் மிகப்பெரிய அரசியல் விஞ்ஞானி கருணாநிதி. விஜயகாந்த் சாதாரண அச்சாணி என்றார்.


No comments: