Monday, April 11, 2011

தமிழ்நாட்டுக்கும்,தமிழக மக்களுக்கும் இது வாழ்வா? சாவா? தேர்தல்; ஜெயலலிதா பேட்டி.

தமிழ்நாட்டுக்கும்,தமிழக மக்களுக்கும் இது வாழ்வா? சாவா? தேர்தல்; ஜெயலலிதா பேட்டி

சென்னையில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு போயஸ் கார்டனுக்கு திரும்பிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வீட்டு வாசலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:-அ.தி.மு.க.வுக்கு இது வாழ்வா? சாவா? தேர்தலா?

பதில்:-இது எங்களுக்கு அல்ல, தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் தான் வாழ்வா? சாவா? தேர்தல். எனவே தி.மு.க. தோற்கடிக்கப்பட வேண்டும்.

கேள்வி:-உங்களை ஊழல்வாதி என்று கருணாநிதி கூறியிருக்கிறாரே?

பதில்:-ஏற்கனவே இதுபற்றி நான் பலமுறை விளக்கி சோர்ந்துவிட்டேன். தி.மு.க. ஆட்சியில் என் மீது வேண்டுமென்றே போடப்பட்ட பொய் வழக்குகள் தான் அவை. அதனால் தான் 13 வழக்குகளை நான் சந்திக்க நேர்ந்தது. நானும் ஊழல்வாதி அல்ல, அ.தி.மு.க.வும் ஊழல் கட்சி அல்ல.

கேள்வி:-மத்திய நிதிமந்திரி பிரணாப் முகர்ஜி தமிழகத்தின் நிதிநிலைமை நல்ல நிலையில் இருப்பதாக கூறியிருக்கிறாரே?

பதில்:-முழுமையான தகவல்கள் தெரியாமல் அவர் பேசியிருக்கிறார். தமிழகத்தில் தொழில்துறை, விவசாயம் போன்ற அனைத்துமே சீரழிந்து இருக்கிறது.

கேள்வி:-நீங்கள் ஆட்சிக்கு வந்தால் தி.மு.க.வினர் மீது ஊழல் வழக்குகள் போடுவீர்களா?

பதில்:-தேர்தல் முடிந்து முதலில் முடிவுகள் வெளிவரட்டும். ஊழல் பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்தபின் தேவைப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கேள்வி:-6-வது முறை முதல்-அமைச்சராக வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளாரே?

பதில்:-அது அவரது விருப்பம். ஆனால் மக்கள் அவர் 6-வது முறையாக முதல்-அமைச்சராக வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

No comments: