Monday, April 11, 2011

30 நகரங்கள் பூகம்ப ஆபத்து பகுதிகள் : தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்.


சென்னை மும்பை உள்பட 30 நகரங்கள், பூகம்ப ஆபத்து பகுதிகளாக இருக்கின்றன என்று, தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி கூறினார்.

தேசிய பேரழிவு தடுப்பு ஆணையத்தின் துணை தலைவர் சஷிதார் ரெட்டி கூறியதாவது:

இந்தியாவில் பூகம்ப ஆபத்து உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்தியாவில் உள்ள நிலத்தில் 58.6 சதவீத பகுதி, பூகம்ப ஆபத்து உள்ள பகுதியாக தெரிய வந்து இருக்கிறது. இவை 4 மற்றும் 5 ம் நிலையில் உள்ள அதிர்வு பகுதியாக கருதப்படுகிறது. இதில் மொத்தம் 235 மாவட்டங்கள் அடங்குகிறது.

சென்னை, டெல்லி, மும்பை, புனே, திருவனந்தபுரம், கொச்சி, கொல்கத்தா, பாட்னா, அகமதாபாத், டேராடூன் உள்பட 38 நகரங்கள் இந்த பகுதியில் வருகின்றன. இவை சராசரியான என்பது முதல், அதிகப்பட்சமான பூமி அதிர்ச்சி பகுதிகளாக கருதப்படுகின்றன.

நாம் முந்திய காலத்திலேயே தவறு செய்து விட்டோம். பூமி அதிர்வை தாங்கும் கட்டிடங்களை கட்ட தவறி விட்டோம். இப்போது பூமி அதிர்ச்சியை தாங்கும் 10 விதமான கட்டிடங்களை கட்ட பரிந்துரை செய்து இருக்கிறோம். புதிய கட்டிடங்கள் கட்டும் போது, அவை அதிர்ச்சியை தாங்கும் தரத்துக்கு கட்டப்பட வேண்டும் என்று கடுமையான கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

இதுபற்றி மும்பை ஐ.ஐ.டி. உள்பட 6 முக்கிய என்ஜினீயரிங் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி. புதிய திட்டங்களையும் தயாரித்து வருகிறோம். இதுபற்றி மாநிலங்களுக்கு விளக்கமாக கடிதம் அனுப்பி இருக்கிறோம். ஆனால் மாநில அரசுகளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

இயற்கை பேரழிவை தடுத்தல் என்பது ஒரு நாள் பணி அல்ல. அதற்கு கூட்டு முயற்சி தொடர்ந்து தேவை. எனவே அனைத்து அதிகாரிகளும், மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

பூமி அதிர்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் நாடு, இயற்கையிலேயே பூமி அதிர்வுக்கு உள்பட்ட பகுதியாகும். அங்கு பூமி அதிர்ச்சியை தாங்கும் கட்டிடங்கள்தான் கட்ட வேண்டும் என்று விதி அமலில் இருக்கிறது. இவ்வாறு அதிகாரி சஷிதார் ரெட்டி கூறினார்.


No comments: