Monday, April 11, 2011

தே.மு.தி.க.வினருக்கு தோல்வி பயம்: ரிஷிவந்தியம் தொகுதியில் திட்டமிட்டபடி பிரசாரம்; நடிகர் வடிவேலு ஆவேசம்

தே.மு.தி.க.வினருக்கு தோல்வி பயம்: ரிஷிவந்தியம் தொகுதியில் திட்டமிட்டபடி பிரசாரம்; நடிகர் வடிவேலு ஆவேசம்

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் வடிவேலு சுறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரசாரத்துக்காக நேற்று சிதம்பரத்தில் தங்கியிருந்த முதல்-அமைச்சர் கருணாநிதியை, நடிகர் வடிவேலு சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தனக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக கருணாநிதியிடம் கூறினார்.

பிறகு மிரட்டல்களுக்கு பயப்படாமல் பிரசாரத்தை தொடருவேன் என நிருபர் களிடம் தெரிவித்தார். அதன்படி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நடிகர் வடிவேலு பிரசாரத்தை தொடர்ந்தார். நேற்று இரவு 10.30 மணி அளவில் திருக்கோவிலூரை அடுத்த கண்டாச்சிபுரம் பகுதியில் அவர் பொது மக்களை பார்த்து கையசைத் தவாறே சென்றபோது மர்ம மனிதர்கள் அவரை நோக்கி செருப்பு மற்றும் கல்லை வீசிவிட்டு தப்பினர்.

இதில் வேனில் இருந்த திருக்கோவிலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்கம் தலையில் படுகாயமடைந்தார். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. கல்வீச்சில் காயமடைந்த தங்கம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். கல்வீச்சு சம்பவம் குறித்து திருக்கோவிலூரில் நிருபர்களிடம் வடிவேலு கூறியதாவது:-

திருக்கோவிலூரை அடுத்த கண்டாச்சிபுரத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக வேனில் வந்து கொண்டிருந்தேன். இரவு 10 மணிக்கு மேலாகி விட்டதால் தேர்தல் ஆணைய விதிப்படி வேட்பாளரை ஆதரித்து பேசாமல் கையை அசைத்தபடியே வந்தேன். அப்போது என்மீது ஒரு செருப்பு வந்து விழுந்தது. அதை நான் பிடித்து தூக்கி யெறிந்து விட்டேன்.

அடுத்து என்னை நோக்கி வீசப்பட்ட கல்லை தடுக்க முயன்ற தி.மு.க. வேட்பாளர் தங்கத்துக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இந்த காயம் எனக்கு ஏற்பட்டதாகவே கருதுகிறேன். தே.மு.தி.க.வினர் தோல்வி பயத்தால் இதுபோல் செயல்படுகின்றனர். இதுமாதிரியான தாக்குதல்களால் எனது பிரசாரத்தை தடுத்து நிறுத்த முடியாது.

கலைஞர் மீண்டும் முதல்-அமைச்சராகும் வகையில் அவரது திட்டங்களை பேசி மக்களிடம் கொண்டு சேர்ப்பேன். ரிஷிவந்தியம் தொகுதியில் திட்டமிட்டபடி எனது பிரசாரம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்வீச்சில் காயமடைந்த தி.மு.க.வேட்பாளர் தங்கம் கூறியதாவது:-

தேர்தலில் எனது வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர் அணியினர் இதுபோன்ற அராஜகங்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு பொதுமக்கள் முடிவு கட்டுவார்கள். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எனது அரசியல் பணி முடிந்து விடாது. பொதுமக்களை தொடர்ந்து சந்திப்பேன்.

இவ்வாறு கூறினார். கல்வீச்சு சம்பவம் குறித்து கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments: