Saturday, August 20, 2011

ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் எழுச்சி : அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு பெருகுவதால் மத்திய அரசு அச்சம்.

ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் எழுச்சி: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு பெருகுவதால் மத்திய அரசு அச்சம்

ஊழலுக்கு எதிராக அன்னாஹசாரே நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. பொது மக்கள், குறிப்பாக பெண்கள் உள்ளிட்ட இளைஞர்கள் மத்தியில் புதிய விடியலுக்கான புரட்சிகரமான எழுச்சி ஏற்பட்டு உள்ளது.

போராட்டத்தை உன்னிப்பாக கவனித்து வரும் மத்திய அரசு, நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் ஆதரவால், அச்சம் அடைந்துள்ளது. மேலும் உண்ணாவிரதம் தொடங்குவதற்கு முன்பே அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலுக்கு அனுப்பியது, மத்திய அரசுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டது.

சட்டம்- ஒழுங்கை கருத்தில் கொண்டு, டெல்லி போலீசார் எடுத்த நிர்வாக நடவடிக்கை என்று அரசு தரப்பில் மூத்த மந்திரிகள் கைது பற்றி விளக்கம் அளித்து இருந்தனர். ஆனால், அடுத்த சில மணி நேரத்திலேயே அன்னாவை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க அரசியல் நடவடிக்கை என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.

அதே நேரத்தில், அவர் விடுதலையாக மறுத்தது, மத்திய அரசுக்கு விழுந்த அடுத்த பலத்த அடியாகும். அவரை விடுதலையாகி சிறையை விட்டு வெளியே செல்வதற்காக பகீரத பிரயத்தன முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவானது. தற்போது ராம்லீலா மைதானத்தில் ஹசாரே உண்ணாவிரதம் தொடங்கியதும், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டுவிட்டது.

பெருகிவரும் மக்கள் உணர்வலைகளுக்கு எதிராக போராட முடியாது என்பதையும் தெளிவாக புரிந்துகொண்டு விட்டது. இதன் காரணமாக, இந்த உண்ணாவிரதத்தில் வெளிப்படையாக தலையிட முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது. எனவே, புதிய முயற்சிகள் மூலம் அவருடைய உண்ணாவிரத போராட்டத்தை முன்கூட்டிய முடிவுக்கு கொண்டுவரும் புதிய முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, ஹசாரே குழுவில் அவருக்கு நெருங்கிய தொடர்புடைய, குறிப்பாக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு அதற்கான முயற்சியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் அன்னா குழுவினரின் மக்கள் லோக்பால் சட்ட மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்புவது அல்லது நிலைக்குழுவின் முன்பு தனது மசோதா பற்றி எடுத்துக்கூற அன்னாவுக்கு அழைப்பு விடுப்பது போன்ற யோசனைகள் பற்றியும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

மத்திய அரசின் புதிய சமரச திட்டம் குறித்து தங்களிடம் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று, அன்னா குழுவை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் ஆகியோர் தெரிவித்தனர். ஆனால், மற்றொரு உறுப்பினரான சந்தோஷ் ஹெக்டே இந்த முயற்சியை சூசகமாக ஒப்புக்கொண்டார்.

பிரதமர், உயர் நீதிபதிகளை லோக்பால் வரம்புக்குள் சேர்ப்பதில் இரு தரப்பிலும் உள்ள பிடிவாதத்தை தளர்த்த தனது குழுவினரிடம் பேசுவதாகவும், அதே நேரத்தில், எங்களுக்கு உடன்பாடு இல்லாத மற்ற 8 அம்சங்களில் அரசு தரப்பில் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறி இருக்கிறார். சி.பி.ஐ. மற்றும் அதிகாரிகள் அல்லாத அரசு ஊழியர்களை சட்ட வரம்புக்குள் கொண்டு வருவது குறித்தும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொண்டு உள்ளது.

No comments: