Saturday, August 20, 2011

2-வது நாளாக லாரி ஸ்டிரைக் : நாமக்கல்லில் 10 கோடி முட்டைகள் தேக்கம்.

2-வது நாளாக லாரி ஸ்டிரைக்:   நாமக்கல்லில் 10 கோடி  முட்டைகள் தேக்கம்

தமிழ்நாடு, புதுவை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மராட்டிய மாநிலத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் 2-வது நாளாக நீடிக்கிறது. இவர்களுக்கு ஆதரவாக ரிக் உரிமையாளர்கள் சங்கம், கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்து இருக்கிறது.

தென் மாநிலங்களில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக இந்த மாநிலங்களில் உள்ள துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து முடங்கியது. போராட்டத்திற்கு தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் நேற்றும், இன்றும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றுள்ளனர். இதனால் முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களாக சுமார் 10 கோடி முட்டைகள் நாமக்கல்லில் தேங்கி உள்ளன. இவை ஆங்காங்கே குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் கரையாம்புதூர் நல்லதம்பி கூறியதாவது:-

முட்டைகளை பாதுகாத்து வைக்க முடியாத சூழ்நிலை இருப்பதால் முட்டைகளை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு வேலை நிறுத்தத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அவ்வாறு விலக்கு அளிக்காத பட்சத்தில் கலெக்டரை சந்தித்து முட்டை லாரிகளை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க கேட்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சத்துணவு திட்டத்துக்கு தேவையான முட்டை கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் இன்று 2-வது நாளாக நீடிப்பதால் சேலம், நாமக்கல் பகுதியில் காய்கறி விலையும் உயர தொடங்கியிருக்கிறது. நேற்றை விட இன்று விலை சற்று அதிகமாக இருந்தது. வாழைக்காய், வாழை இலை, தக்காளி, கத்திரிக்காய், இங்கிலீஷ் காய்கறிகள் விலையும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

லாரி ஸ்டிரைக் காரணமாக பொதுமக்கள் அதிகளவில் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதியது. லாரி தொழில் மூலம் அரசு மற்றும் லாரி உரிமை யாளர்களுக்கு தினமும் ரூ. 3500 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும். இன்றுடன் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் மட்டும் ரூ. 2ஆயிரம் கோடிக்கு பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது. லாரி ஸ்டிரைக் காரணமாக ஈரோட்டில் மஞ்சள் விற்பனை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மஞ்சள் மண்டிகளில் தினசரி ஏலம் விடப்படும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து இந்த ஏலத்தில் கலந்து கொண்டு மஞ்சளை வாங்கி செல்வார்கள். ஆனால் இப்போது லாரி ஸ்டிரைக் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் மஞ்சள் ஏலம் நடைபெறாததால் சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள மஞ்சள் தேக்கம் அடைந்துள்ளது.

நேற்று முதல் மஞ்சள் ஏலம் விடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் முடிந்ததும் மஞ்சள் ஏலம் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது போல ஜவுளி விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான்- ஓணம் பண்டிகையை யொட்டி வெளி மாநில வியாபாரிகள் ஈரோடு வந்து ஜவுளிகளை வாங்கி செல்வார்கள். இப்போது இதன் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து ஜவுளிகளும் வரவில்லை.

No comments: