Friday, August 19, 2011

தங்கம் விலை பவுன் ரூ.21 ஆயிரத்தை நெருங்கியது.

தங்கம் விலை பவுன் ரூ.21 ஆயிரத்தை நெருங்கியது

கடந்த 2009-ம் ஆண்டு ஒரு பவுன் தங்கம் ரூ.10 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. அப்போது இதுகுறித்து மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதில் இருந்து தங்கம் விலை ராக்கெட்டை மிஞ்சும் வேகத்தில் இடைவிடாது விர்ரென அதிரடியாக உயர்ந்து வருகிறது.

2010-ம் ஆண்டில் ஒரு பவுன் 12 ஆயிரத்து 784 வரை விற்கப்பட்டது. இது படிப்படியாக உயர்ந்து இந்த ஆண்டில் (2011) கடந்த ஏப்ரல் மாதம் பவுன் ரூ.16 ஆயிரத்தை கடந்தது.

தொடர்ந்து “ஜெட்” வேகத்தில் ஏறிய தங்கம் நேற்று ஒரு பவுன் 20 ஆயிரத்தை தாண்டியது. பவுன் ரூ.20 ஆயிரத்து 32 ஆக இருந்தது. ஒரு கிராம் ரூ.2,504-க்கு விற்கப்பட்டது. இது வரலாறு காணாத விலை உயர்வு என வர்ணிக்கப்பட்டது.

ஏழை எளிய மக்களும், பெண் குழந்தைகளை பெற்றவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களுக்கு தங்கம் எட்டாக் கனியாகி விட்டதே என்ற வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதற்கிடையே இன்று தங்கம் விலை மேலும் எகிறியுள்ளது. ஒரே நாளில் ஒரு பவுனுக்கு ரூ.648 அதிகரித்து ரூ.20 ஆயிரத்து 680 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2504க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் தங்கம் பவுன் ரூ.21 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

பங்கு சந்தை வீழ்ச்சி, அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சி மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இனி சுப முகூர்த்த நாட்கள் தொடங்கி விட்டதால் தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை. தொடர்ந்து உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோ வெள்ளி ரூ.62 ஆயிரத்து 625 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.67க்கு விற்கப்படுகிறது.

No comments: