Friday, August 19, 2011

3 மாதத்தில் 8,600 நில அபகரிப்பு புகார்கள்.

3 மாதத்தில் 8,600 நில அபகரிப்பு புகார்கள்: தகுந்த ஆதாரம் இருந்தால் மட்டுமே நடவடிக்கை- கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் தகவல்
தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நடந்த நில அபகரிப்பு பற்றி போலீசுக்கு தினமும் ஏராளமான புகார்கள் வருகின்றன. இந்த புகார்களில் போலீசார் எடுக்கும் நடவடிக்கைகளை கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் கண்காணித்து வருகிறார்.

அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த 3 மாதத்தில் 8,600 நில அபகரிப்பு புகார்கள் வந்துள்ளன. இதில் விசாரணை நடத்திய பின்பு 430 புகார்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்ற புகார்களையும் நில அபகரிப்பு பிரிவு தனிப்படை விசாரித்து வருகிறது. பலகோடி நிலம் மோசடி புகார்களில் தகுந்த ஆதாரத்துடன் கூடிய உண்மையான, தகுதியான புகார்கள் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கிறோம்.

நிலஅபகரிப்பு மிரட்டல், பலப்பிரயோகம், அச்சுறுத்தல் போன்ற புகார்களில் மட்டுமே நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். கடந்த மாதத்தில் மட்டும் 6000 புகார்கள் வந்துள்ளன. நில அபகரிப்பு வழக்கில் போலீசார் நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்கிறோம். இதனால் போலீசார் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு பாதிக்கப்பட்டோர் யாருக்கும் பயப்படாமல் தைரியமாக புகார் கொடுக்க முன்வருகிறார்கள்.

எனவேதான் புகார்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றன. கோவை, சேலம், ஈரோடு ஆகிய மேற்கு மாவட்டங்களில்தான் அதிக அளவில் நில அபகரிப்பு புகார்கள் வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் தலைமையகங்களில் புகார் செய்து வருகிறார்கள். தமிழ்நாடு போலீஸ் இணைய தளத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யலாம்.

இவ்வாறு ஜார்ஜ் கூறினார்.

No comments: