Thursday, August 18, 2011

26 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தம்... விலைவாசி உயரும் அபாயம் !



தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்றுமுதல் 26 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இதனால் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களின் விலைகள் தாறுமாறாக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதைத் தொடர்ந்து லாரி அதிபர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். மேலும் இன்சூரன்ஸ் கட்டணம், உதிரிபாகங்கள் மீதான விலை உயர்வினை குறைக்க வேண்டும், தனியார் மூலம் சுங்கவரி வசூலிப்பது நிறுத்தப்பட வேண்டும், சரக்கு இல்லாமல் காலியாக செல்லும் வாகனங்களுக்கு 25 சதவீத சுங்கவரி மட்டுமே வசூலிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை தென் இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்தது.

இது தொடர்பாக டெல்லியில் மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன. ஆகவே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தென் இந்திய லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்து உள்ளது.

இதையொட்டி தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இன்று நள்ளிரவு முதல் ஏறத்தாழ 26 லட்சம் லாரிகள் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு லாரி தொழிலை சார்ந்த பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சங்கம் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடந்த 14-ந் தேதி முதல் வெளிமாநிலங்களுக்கு சரக்கு பதிவு செய்வதை நிறுத்தி கொண்டன.

எனவே வெளிமாநிலங்களுக்கு செல்லும் லாரிகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்துவிட்டது. இதனால் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் ஜவுளி, தீப்பெட்டி, தேங்காய், பட்டாசு உள்ளிட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள சரக்குகள் தேங்கி உள்ளன.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி இன்று நள்ளிரவு முதல் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மராட்டிய மாநிலங்களில் 26 லட்சம் லாரிகள் ஓடாது. இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு லாரி உரிமையாளர்களுக்கு ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாயும், 6 மாநில அரசுகளுக்கும் சேர்த்து 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயும் சேர்த்து மொத்தம் ரூ.3 ஆயிரத்து 500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கமும் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் இன்று நள்ளிரவு முதல் நாமக்கல் தாலுகா அளவில் 8 ஆயிரம் டிரெய்லர் லாரிகளும், தமிழக அளவில் 30 ஆயிரம் டிரெய்லர் லாரிகளும், 6 மாநிலங்களிலும் சேர்த்து 70 ஆயிரம் டிரெய்லர் லாரிகளும் ஓடாது என நாமக்கல் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தென்மண்டல எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் 4100 கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இவை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டரில் கியாஸ் நிரப்பும் நிறுவனங்களுக்கு சமையல் எரிவாயுவை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி இன்று நள்ளிரவு முதல் பாதுகாப்பு கருதி கேஸ் டேங்கர் லாரிகளையும் நிறுத்த அதன் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

எனவே இன்று தொடங்கும் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நீடிக்கும் பட்சத்தில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

No comments: