Saturday, April 23, 2011

நாவரசு கொலை வழக்கு : குற்றவாளி ஜான்டேவிட்டின் தாயார் சென்னையில் பதுங்கல்.


சிதம்பரம் மாணவர் நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டின் பெற்றோர் தலைமறைவானார்கள். தாயார் சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜான் டேவிட்டை கைது செய்ய கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் சிதம்பரம் போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதில் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், தலைமை போலீசார் ரவி, வேல்முருகன் ஆகியோர் கொண்ட ஒரு தனிப்படையினர் ஜான்டேவிட்டின் சொந்த ஊரான கரூரை அடுத்த வெங்கமேட்டிற்கு வந்தனர். பின்னர் வெங்கமேட்டில் ஜான் டேவிட் வீட்டிற்கு சென்றனர். ஆனால் ஜான்டேவிட்டின் தந்தை டாக்டர் டேவிட் மாரிமுத்து, தாய் டாக்டர் எஸ்தரின் லட்சுமி ஆகிய 2 பேரும் வீட்டில் இல்லை. வீடு பூட்டப்பட்டு கிடந்தது.

அவர்களுடைய வீட்டின் கீழ் தளத்தை பி.எஸ்.என்.எல்.அலுவலகத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் பி.எஸ்.என்.எல். ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் கூறியதாவது:

மாணவர் நாவரசு கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஜான் டேவிட்டை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த 3 தனிப்படைபிரிவில் 2 பிரிவினர் திருச்சி, சென் னைக்கு சென்று விட்டனர்.

ஒரு பிரிவான நாங்கள் ஜான்டேவிட்டின் சொந்த வீடு உள்ள கரூர் வெங்கமேடு வந்து சோதனை செய்தோம். ஆனால் இங்கு யாரும் இல்லை. வீடு பூட்டப்பட்டு கிடக்கிறது. இதைத்தொடர்ந்து அவருக்கு சொந்தமான வீட்டின் கீழ் தளத்தை பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு வாடகைக்கு விட்டு இருக்கிறார்கள். இதனால் டேவிட் மாரிமுத்து இங்கு எப்போது வந்தார், வாடகை பணம் எவ்வாறு பெற்று உள்ளார் என்பது குறித்து இங்கு உள்ள அலுவலர்களிடம் விசாரித்து உள்ளோம். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்த வீட்டில் டேவிட் மாரிமுத்து இருந்து உள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் தலை மறைவாகி உள்ளார். தாய் எஸ்தரின் லட்சுமி தற்சமயம் சென்னையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதே போன்று இங்கு முன்பு பணியாற்றி வந்த வாட்ச் மேன்களிடமும் விசாரணை நடத்த உள்ளோம். அதே போன்று ஜான்டேவிட் படித்த கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று அங்கு அவரது முழுவிவரங்கள் பற்றி விசாரிக்க திட்டமிட்டுள்ளோம்.

மேலும் ஜான் டேவிட்டின் தந்தை டேவிட் மாரிமுத்து பணியாற்றிய கரூரில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் விசாரணை நடத்த உள்ளோம். ஜான்டேவிட்டின் தாய் எஸ்தரின் லட்சுமி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வந்து உள்ளார். அவர் பணியாற்றி வந்த பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளிலும் விசாரணை நடத்தப்படும். மேலும் கரூரில் உள்ள ஜான் டேவிட்டின் உறவினர்களிடமும் விசாரித்து வருகிறோம்.

உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் சில முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன. பாஸ்போர்ட்டு அலுவலகத்தில் நடத்திய விசாரணையில் ஜான்டேவிட் பெயரில் பாஸ்போர்ட்டு எதுவும் எடுக்க வில்லை என்று தெரியவந்துள்ளது. ஒருவேளை வேறு பெயரில் பாஸ்போர்ட்டு எடுத்துள்ளாரா? என்று விசாரித்து வருகிறோம். இருந்தாலும் ஜான்டேவிட் தமிழகத்தில் தான் பதுங்கியிருக்க வேண்டும் என்று நம்புகிறோம், விரைவில் ஜான்டேவிட் கைது செய்யப்படுவார் என்றார்.

இன்ஸ்பெக்டர் ராமநாதன், சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில் எட்டு போலீசார் அடங்கிய தனிப்படையினர் சென்னை வந்துள்ளனர். அடையாறில் ஜான்டேவிட்டின் தாயார் சில நாட்களுக்கு முன்பு தங்கியிருந்துள்ளார். தனிப்படை போலீசார் நேற்று அங்கு சென்று பார்த்தபோது தாயார் வேறு இடம் சென்று விட்டது தெரியவந்தது. ஜான்டேவிட்டின் தாயாரை ஓரளவு நெருங்கி விட்டோம் என்றும், அவர் பிடிபட்டால் ஜான்டேவிட் பற்றிய மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டு விடும் என்றும், சென்னை வந்துள்ள தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

No comments: