Saturday, April 23, 2011

அதிகாரிகளின் செயற்பாடுகளால் டைம்ஸ் பத்திரிகை வாக்கெடுப்பில் நான் அவமானப்பட்டேன் : ராஜபக்சே.


டைம்ஸ் பத்திரிகையின் உலகின் அதிகாரம் வாய்ந்த 100 தலைவர்களின் பட்டியலில் இலங்கை அதிபர் ராஜபக்சே 4வது இடத்தில் இடம் பெற்று இருந்தார்.

இது தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்புகளில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதாகவும், அதற்காக அதிபரின் ஊடக செயலகத்தில் தனியாக குழு ஒன்று அமைக்கப்பட்டு மோசடியாக வாக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், அந்த தலைவர்கள் பட்டியலில் இருந்து ராஜபக்சேவின் பெயர் அதிரடியாக நீக்கப்பட்டுவிட்டது.

தலைவர்கள் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதையடுத்து, ஒரு சில அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாகவே டைம்ஸ் பத்திரிகையின் வாக்கெடுப்பில் நான் அவமானப்பட நேர்ந்தது என்று ராஜபக்சே கூறியுள்ளார்.

ராஜபக்சே தனது செயலாளர் ஒருவரிடம் டைம்ஸ் பத்திரிகையின் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாதது குறித்து உரையாடும்போது இதனை குறிப்பிட்டதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

டைம்ஸ் பத்திரிகை வாக்கெடுப்பில் தனது பெயரை சேர்க்க வைத்து, அதன் மூலம் உலகளாவிய ரீதியில் பெரும் கௌரவத்தை ஈட்டிக் கொள்ள முடியும் என்று ராஜபக்சேவை நம்ப வைத்த அதிகாரி ஒருவரும், அவரது நண்பரான வர்த்தகர் ஒருவரும் அந்த நடவடிக்கைகளுக்காக கோடிக்கணக்கில் ராஜபக்சேவிடம் பணம் வாங்கிக் கொண்டிருந்தனர்.

அதன் பின்பு அவர்கள் ராஜபக்சேவின் பெயரைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் இருந்தும் தமது நடவடிக்கைகளுக்கான ஆதரவைப் பெற்றுக் கொண்டிருந்தனர். அதன் மூலமாக ராஜபக்சேவின் பெயரை டைம்ஸ் பத்திரிகையின் வாக்கெடுப்பு பட்டியலில் இடம்பெற வைத்து மேலுமொரு தொகையையும் இலங்கை அரசிடம் இருந்து கறந்து கொண்டிருந்தனர்.

டைம்ஸ் பத்திரிகையின் வாசகர்களின் வாக்குகள் மூலமாக மட்டுமே உலகின் செல்வாக்குமிக்க நபர்களின் வரிசை பட்டியலிடப்படும் என்று நம்பியிருந்த ராஜபக்சேவும், அவரது புகழ்பாடும் ஊடகங்களும் பட்டியலில் நான்காம் இடத்தை ராஜபக்சே பெற்றுக் கொண்டிருந்தமை குறித்து பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தனர்.

ஆயினும் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் குழுவின் இறுதி முடிவின்படியே உலகின் செல்வாக்கு மிக்க நபர்கள் தொடர்பான பட்டியல் வெளியான நிலையில், முன்பு வெளியான பட்டியல் கலைந்து போனதன் காரணமாக அதற்குக் காரணமாக இருந்த அதிகாரிகளை ராஜபக்சே கடுமையாகத் திட்டித் தீர்த்துள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

No comments: