Saturday, April 23, 2011

ஜப்பானில் இருந்து வரும் கப்பல்கள் தண்ணீரை வெளியேற்ற அனுமதிக்க வேண்டாம்.


ஜப்பானில் கதிர்வீச்சு அபாயம் எதிரொலியால் அந்நாட்டில் இருந்து வரும் கப்பல்கள் தண்ணீரை வெளியேற்ற அனுமதிக்க வேண்டாம் என 2 முக்கிய துறைமுகங்களை கோவா மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

மர்மகோவா துறைமுக அறக்கட்டளைக்கும், மாநில அரசுக்குச் சொந்தமான பனாஜி துறைமுகத்துக்கும் இதுதொடர்பாக கோவா மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவையடுத்து ஜப்பானில் இருந்து சமீபத்தில் வந்த ஒரு பெரிய கப்பல் துறைமுகத்துக்கு வெகுதூரத்தில் நிறுத்தப்பட்டது.

ஜப்பான் துறைமுகம் சென்றுவிட்டு வரும் 2 கப்பல்கள் கோவா துறைமுகத்துக்குள் நுழையலாம் என மாநில அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குநர் தகவல் அளித்ததையடுத்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

உடனடியாக 2 துறைமுகங்களுக்கும் உத்தரவு பிறப்பித்து விட்டோம் என கோவா மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சைமன் டி செளஸா தெரிவித்தார்.

கதிர்வீச்சின் அளவைத் தெரிந்துகொள்ளும் கருவி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இல்லை. அந்த தண்ணீர் கதிர்வீச்சால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று டி செளஸா குறிப்பிட்டார்.

ஜப்பான் துறைமுகத்துக்கு சென்றுவிட்டு வந்த 2 கப்பல்களில் ஒன்று, கோவாவுக்கு வெகுதூரத்தில் நிறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கதிர்வீச்சு அபாயம் இல்லை என்றும், கப்பலில் உள்ள தண்ணீரை பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் சர்வதேச கடல் அமைப்புகள் தெரிவிக்கும் கடிதத்தை அந்த கப்பலின் முகவர் அளித்துள்ளதாக டி செளஸா கூறினார்.

கோவா வரும்வழியில் சிங்கப்பூர் கடற்கரைக்கு அப்பால் ஏற்கனவே தண்ணீரை வெளியேற்றிவிட்டு புதிய தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளதாக அந்த முகவர் கூறியிருந்தார். முகவர் கூறிய ஆவணங்களை பரிசோதித்த பின்னரே இந்த விவகாரத்தில் கோவா மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இறுதி முடிவு எடுக்கும் என டி செளஸா தெரிவித்தார்.

No comments: