Saturday, April 23, 2011

ஆந்திர மாநிலத்தில் இருந்து தோண்டி எடுத்துவரப்பட்ட மரங்கள் ஸ்டெர்லைட் ஆலையில் நடப்பட்டுள்ளன; ஆய்வு குறித்து வைகோ அறிக்கை.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தோண்டி எடுத்துவரப்பட்ட மரங்கள்    ஸ்டெர்லைட் ஆலையில் நடப்பட்டுள்ளன;    ஆய்வு குறித்து வைகோ அறிக்கை

ஸ்டெர்லைட் ஆலையில் நடைபெற்று வரும் ஆய்வுகள் குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

குஜராத் மாநிலத்தில் அனுமதி வாங்க முடியாமல், கோவாவில் கால் பதிக்க முடியாமல், தமிழ்நாட்டில் முத்து வளமும், மீன் வளமும் கொண்ட அழகிய கடல் பூங்காவாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தூத்துக்குடி கடலோரத்தில், ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலைக்கு, அன்றைய அ.தி.மு.க. அரசின் அனுமதியையும், அன்றைய மத்திய காங்கிரஸ் அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதியையும் பெற்று, ஸ்டெர்லைட் ஆலையை நிறுவியது.


கடற்கரையில் இருந்து 25 கிலோ மீட்டர் எல்லைக்கு உள்ளே ஆலை அமைக்கக் கூடாது என்ற சுற்றுசூழல் அமைச்சகம் வரையறுத்த சட்ட விதியை மீறி, 15 கிலோ மீட்டர் தொலைக்கு உள்ளேயே ஸ்டெர்லைட் ஆலை, அ.தி.மு.க. அரசின் அனுமதியோடு அமைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி 250 மீட்டர் சுற்றளவுக்கு அடர்த்தியான பசுமைச் சூழல் அமைக்க வேண்டும் என்று முதலில் நிபந்தனை விதித்த தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஒரு சில நாள்களுக்கு உள்ளாகவே, 94 ஆகஸ்ட் 18- ஆம்நாள், 25 மீட்டர் சுற்றளவுக்கு பசுமைச்சூழல் அமைத்தால் போதும் என்று நிபந்தனையைத் தளர்த்திக் கொண்டது.

கடந்த பிப்ரவரி 25-ந் தேதி உச்ச நீதிமன்றம், நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் அறிவியல் ஆய்வுக் கூடம் நீரி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தி எட்டு வாரங்களுக்குள் அறிக்கை தர வேண்டும் என ஆணையிட்டது. ஆய்வின் போது, எதிர்மனுதாரர் களையும் பங்கு ஏற்கச் செய்ய வேண்டும் என்று கூறியது. 40 நாள்கள் கழித்தே நீரி நிறுவனத்தில் இருந்து டாக்டர் நந்தி தலைமையில் ஆய்வுக்குழு ஏப்ரல் 6,7,8 தேதிகளில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வுகளை மேற்கொண்டது. மீண்டும் ஏப்ரல் 19ந் தேதி ஆய்வு தொடங்கியது.

இதில் நானும் சுற்றுச் சூழல் நிபுணர் நித்தியானந் ஜெயராமன், வழக்கறிஞர் தேவதாஸ், தூத்துக்குடி மாவட்ட கழகச் செயலாளர் ஜோயல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கனகராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டோம். 25 மீட்டர் சுற்றளவுக்கு ஆலையில் அடர்ந்த பசுமைச் சூழல், மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆணைப்படி அமைக்கப்பட்டு உள்ளதா? என்பதற்கான ஆய்வு நடத்தப்பட்டது. 80 ஆயிரம் மரங்கள் நடப்பட்டு இருப்பதாக, உண்மை இல்லாத ஒரு செய்தியை, ஸ்டெர்லைட் கூறி வருகிறது.

உயர்நீதிமன்றம் ஆலையை மூடச் சொன்னதற்குப் பின்னர், ஆந்திர மாநிலத்தில் மண்ணில் இருந்து பிடுங்கப்பட்ட ஓரளவு வளர்ந்த மரங்களையும், செடிகளையும், லாரிகளில் ஏற்றிக் கொண்டு வந்து, ஸ்டெர்லைட் வளாகத்துக்கு உள்ளே நட்டு வைத்து இருப்பதை, அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் நமக்குத் தெரிவித்து இருந்தனர். அதனால், பல இடங்களில் மரங்கள் பட்டுப் போய் நிற்பதும், ஒரு போலித் தோற்றத்தை ஏற்படுத்தவே, ஸ்டெர்லைட் முயற்சிக்கிறது என்பதையும் நீரி ஆய்வுக்குழுவிடம் தெரிவித்தோம்.

வருகின்ற 29-ந் தேதி, உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றது. இடையில் 4 நாள்களே உள்ளன. நீரி நிறுவனம், உச்ச நீதிமன்றத்துக்குத் தரும் அறிக்கையின் நகல்கள், நமக்கும் தரப்படும். அந்த அறிக்கையைக் கண்டபிறகே அது குறித்து நம்முடைய கருத்துக்களைத் தெரிவிக்க இயலும். விவசாயிகள், மீன வர்களின் வாழ்வு ஆதாரங்களைக் காக்கவும், சுற்றுச் சூழல் நாசமாவதால் ஏற்படும் நோய்களில் இருந்து பொதுமக்களை, குறிப்பாக குழந்தைகளைப் பாதுகாக்கவும், தூய நோக்கத்தோடு நாம் மேற்கொண்டு உள்ள, நீதிக்கான அறப்போராட்டத்தை நம்பிக்கையோடு தொடர்வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: