Sunday, May 29, 2011

மெட்ரிக் பள்ளிகள் லாபமடைய அரசு துணைபோகிறது : பொன்முடி குற்றச்சாட்டு


சமச்சீர் கல்வியை நீக்கி, மெட்ரிக் பள்ளிகள் லாபமடைய அதிமுக அரசு துணை போகிறது என்று முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தீர்மானங்களை வாசித்தபின் அவர் பேசியது:

ஆட்சியில் இருந்தபோது நடந்த கூட்டங்களுக்கு வந்ததைவிட இப்போது அதிகளவில் கூட்டம் வந்துள்ளது, இதுதான் திமுக. விழுப்புரம் மாவட்டம் மிக மோசமான தோல்வியை சந்தித்தாலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளீர்கள்.

தேர்தல் தோல்வி குறித்து நாம் இங்கு பேசவரவில்லை, அதற்கான காரணங்களை நீங்கள் ஏற்கெனவே பேசிவிட்டிருப்பீர்கள். ஜூன் 3-ம் தேதி கருணாநிதியின் 88-வது பிறந்தநாள் விழாவை பட்டிதொட்டியெல்லாம் கூட்டங்கள் நடத்தி கொண்டாட வேண்டும்.

தோல்வி நிரந்தரமல்ல, உள்ளாட்சித் தேர்தல் வருகிறது, அடுத்து மக்களவைத் தேர்தல் வருகிறது. இப்படி பரபரப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஒரு தொகுதியில் வெற்றிபெற்று இவ்வளவு பெரிய இயக்கத்தை கட்டிக்காத்த தலைவர் (கருணாநிதி) நம்முடன் இருக்கிறார் என்ற மகிழ்வோடு நாம் கட்சிப் பணியாற்றுவோம்.

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் ஒரே பாடமுறையில் கல்வி கற்க, 5 ஆண்டுகளாகப் படிப்படியாக கல்வியாளர்கள் குழு கருத்தைக் கேட்டே செயல்படுத்தியுள்ளோம். முத்துக்குமரன் குழுவுக்குப் பிறகு மற்றொரு குழுவும் அமைத்து தமிழ்வழி, ஆங்கில வழி என படிக்கலாம், ஆனால் ஒரே பாடத்தைப் படிக்க வேண்டும் என்பதுதான் சமச்சீர் கல்வி.

உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டது சமச்சீர் கல்வி. இதனை நிறுத்துவதற்கு பதில் அதை செயல்படுத்த படிப்படியாக அடிப்படை வசதிகளை மேம்படுத்தி இருக்கலாம்.

மெட்ரிக் பள்ளிகள் லாபமடைய இக்கல்வி முறையை அவர்கள் எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு துணைபோகிற அரசாக அதிமுக அரசு உள்ளது என்றார்.

No comments: