Sunday, May 29, 2011

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு : நகரசபை தலைவர்கள் - மேயர் நேரடியாக தேர்வு ; தமிழக அரசு பரிசீலனை.


உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு:  நகரசபை தலைவர்கள்- மேயர் நேரடியாக தேர்வு; தமிழக அரசு பரிசீலனை

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலைப் போல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும். உள்ளாட்சி அமைப்பில் சென்னை, வேலூர், கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி ஆகிய 10 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் 10 மேயர்கள் பதவி வகித்து வருகிறார்கள்.

அவர்களில் 8 பேர் தி.மு.க.வினர், 2 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள். இதேபோல் 148 நகரசபை தலைவர்கள் உள்ளனர். இது தவிர மாவட்ட ஊராட்சிகள் 31, ஊராட்சி ஒன்றியங்கள் 385, பேரூராட்சிகள் 561 உள்ளன. மொத்தத்தில் பேரூராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்பட 1 லட்சத்து 32 ஆயிரத்து 95 பதவிகள் உள்ளன.

தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வருகிற அக்டோபர் மாதம் 21-ந்தேதி முடிவடைகிறது. ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசு உள்ளாட்சி தேர்தலை வழக்கமான காலத்தில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட சையத் முனீர்கோடா கடந்த 24-ந்தேதி பதவி விலகினார்.

புதிய தேர்தல் அதிகாரியாக சோ. அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட முதற்கட்டப் பணிகள் தொடங்கி உள்ளன. இந்த பணிகள் முடிந்ததும் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

அநேகமாக ஆகஸ்ட் மாதம் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் மேயர்கள், நகரசபை தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு வந்தனர். ஆனால் கடந்த தி.மு.க. ஆட்சியில் இந்த முறையை ரத்து செய்து விட்டு பெரும்பான்மை உறுப்பினர்களே தலைவர்களை தேர்வு செய்யும் முறையை கொண்டு வந்தனர்.

உள்ளாட்சி மன்றத்தில் தலைவர் ஒரு கட்சியாகவும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் மாற்று கட்சியாகவும் இருந்தால் தீர்மானங்களை நிறைவேற்று வதில் சிக்கல்கள் ஏற்படுவதால் புதிய முறையை கொண்டு வந்ததாக கூறினார்கள். ஆனால் எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

தலைவர்களை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யவேண்டும் என்று வலியுறுத்தியது. இப்போது ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள அ.தி.மு.க. மீண்டும் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வருவது பற்றி பரிசீலித்து வருகிறது. முன்பு நடைமுறையில் இருந்தது போல் மேயர்கள், நகரசபை தலைவர்கள் பதவிகளுக்கு மக்கள் வாக்களிக்கும் நேரடி தேர்தல் முறை மீண்டும் அமல்படுத்தப்படலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments: