Sunday, May 29, 2011

நல்வழி காட்டுவார்களா ஆட்சியாளர்கள்?

சி. சீனிவாசன்


நாளும் உழைத்திடும் ஏழை எளிய தொழிலாளர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும், வளம் பெற வேண்டும் என்பதே நமது குறிக்கோள் என்று மே தினத்தில் விடுத்த அறிக்கையில் அன்றைய முதல்வர் கருணாநிதி கூறி இருந்தார்.

இதேபோல் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம், உழைப்பவரை உயர்த்துவோம் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்து, தொழிலாளர்கள் வாழ்வில் நலமும் வளமும் கொழிக்கட்டும் என வாழ்த்துகிறேன் என்று அதிமுக பொதுச் செயலரும் இன்றைய முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

இந்த வாழ்த்துகளைக் கூறும் இவர்கள் உண்மையிலேயே தொழிலாளர்கள் மீதும், நாட்டு மக்கள் மீதும் அக்கறையோடுதான் இருக்கிறார்கள் என்றால், தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறந்து தொழிலாளர் வர்க்கத்துக்கும், குடும்பப் பெண்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் தீமையை விளைவிப்பார்களா?

ஒரு நல்ல அரசின் கடமைகள், அரசுக்கு வருவாய்க்கு வழிவகை செய்தல், வருவாயைத் திரட்டுதல், நிதி விரயம் ஆகாமல் காத்தல், திட்டமிட்டு நிதியை ஒதுக்கீடு செய்தல் என்பதை "இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த வகுத்தலும் வல்லது அரசு' என்று வள்ளுவன் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார். ஆனால் இன்றைய தலைவர்கள் நாட்டுக்கு எப்படி வருவாய் ஈட்டுவது என்பது தெரியாமல் திக்குமுக்கு ஆடுகிறார்கள்.

"மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு' என்று கூறிக்கொண்டே, வருவாயின் மூலாதாரமே மதுக்கடைகள் தான் என்று கூறும் வகையில் தமிழகத்தில் வீதிகள்தோறும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

கிராமங்கள்தோறும் மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி அமைக்க வேண்டும். தொடக்கப் பள்ளி இல்லாத கிராமமும், நடுநிலைப் பள்ளி இல்லாத பஞ்சாயத்தும் தமிழகத்தில் இருக்கக் கூடாது என்பதற்காக பள்ளிகளைத் திறந்து குழந்தைகளுக்கு கல்வி தந்தவர் காமராஜ்.

பள்ளிக் குழந்தைகள் வறுமை காரணமாக கல்வி கற்காமல் இருக்கக் கூடாது என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தையும் அவரே தொடங்கினார்.

ஆனால் இன்றோ, கிராமங்கள்தோறும் மதுக்கடை திறப்பதும், பள்ளி, கல்லூரிகள் அருகிலும்கூட மதுக்கடைகளை ஏக வசதியுடன் திறந்து வருவாய் ஈட்டுவதும்தான் அரசின் முனைப்பாக இருக்கிறது.

வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, கல்லூரி, மக்கள் வசிக்கும் இடங்களில் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியருக்கும், அரசுக்கும், நீதிமன்றத்துக்கும் மனு அளிப்போர் எண்ணிக்கை எத்தனை, எத்தனை?

மேலும், மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண்கள், மாணவர்கள் போராடாத இடம் தமிழகத்தில் எங்கு உள்ளது?

சென்னையில் வழிபாட்டுத் தலம், பெண்கள் பள்ளிக்கு அருகே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் பிரச்னை ஏற்படுவதாகக் கூறி மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால், டாஸ்மாக் நிறுவனம், இக்கடையை இடமாற்றினால் மது விற்பனை வருவாய் குறைந்து விடும் என்று நீதிமன்றத்துக்குப் பதில் அளித்தது.

குடும்பப் பெண்களின் நிம்மதியைக் கெடுத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களின் மனதைச் சீர்குலைத்து நாட்டுக்கு வருமானம் ஈட்டித் தரும் மதுக்கடைகளை நம்பித்தான் தமிழக அரசு இருக்கிறது என்றால், வருமானத்துக்காக வீட்டுக்கு ஒருவர் கட்டாயம் மது அருந்த வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றவும் தயங்காது போலிருக்கிறதே?

விஷச்சாராயம் குடித்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பைக் குறைக்கத்தான் இந்த டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதாக அரசு சார்பில் கூறப்படுகிறது.

ஆனால், மது அருந்திவிட்டு கொடுமைப்படுத்துவதாக மகளிர் காவல்நிலையத்தில் கணவன் மீது புகார் கொடுக்கும் மனைவியும், மது அருந்தப் பணம் இல்லாமல் பிஞ்சுக் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் தந்தையும் அதிகரித்து வருகின்றனர். மேலும், குடி போதையில் பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவோரும், வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்போரும் அதிகரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியில் அண்மையில் 7 வயது பெண் குழந்தையையும், 4 வயது ஆண் குழந்தையையும் பேருந்து நிறுத்தத்தில் விட்டுவிட்டு மதுக்கடைக்குச் சென்ற தந்தை ஒருவர் போதை மீறிய நிலையில் டாஸ்மாக் கடையின் முன் ரோட்டில் கிடந்துள்ளார்.

வழியின்றித் தவித்த அந்த பிஞ்சுக் குழந்தைகளை அக்கம்பக்கத்தினர் மீட்டு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்து தாயிடம் ஒப்படைத்தனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடரத்தான் வேண்டுமா?

நாட்டுக்கு 15 சதவிகித வருமானம் டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கிறது என்பதற்காக, நாட்டு மக்களின் பணத்தைச் சுரண்டுவதுடன் அவர்களது உடல்நலத்துக்கும் உயிருக்கும் கேடு விளைவிக்கிறது அரசு.

இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, கல்வியில் பின்தங்கிய மாநிலமாக இருந்த பிகார், இப்போது அம்மாநில முதல்வர் நிதீஷ் குமாரின் திறமையான ஆட்சியால் தொழில் வளர்ச்சி மற்றும் பல்வேறு துறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

காந்தி பிறந்த மாநிலமான குஜராத்தில் மதுவிலக்கு பூரணமாக அமலில் உள்ளது. அம் மாநிலம்தான் இந்திய அளவில் முன்னேற்றத்தில் முதலிடத்தில் உள்ளது. பிகாரும் குஜராத்தும்தான் தமிழகத்தின் முன்மாதிரிகளாக இருக்க வேண்டும். வருங்காலத் தலைமுறை வாழ வழிவகை செய்வதே அரசின் கடமை.

நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காவும் நல்ல திட்டங்கள் பல தீட்டி, நேர்மையான ஆட்சி செய்யும் தலைவரையே ஊர் போற்றும், இந்த உலகம் போற்றும். இதை உணர்ந்து மதுக்கடைகளை மூடிவிட்டு மக்களுக்கு நல்வழி காட்டுவார்களா, தமிழக ஆட்சியாளர்கள்?

No comments: