Sunday, May 29, 2011

மகாராஷ்டிர அரசு பணிந்தது : 9 நாள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் மேதா பட்கர்.


மும்பை, குடிசைவாசிகள் தங்கியிருந்த இடத்தை மகாராஷ்டிர அரசு தனியார் நிறுவனத்துக்கு அளித்ததை எதிர்த்து சமூக நல ஆர்வலர் மேதா பட்கர் 9 நாள்களாக மேற்கொண்டிருந்த உண்ணாவிரதம் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது.

குடிசைவாசிகளை அந்த இடத்தில் இருந்து அகற்றும் முடிவை மகாராஷ்டிர அரசு கைவிட்டதை அடுத்து அவர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

மும்பையின் புறநகர் பகுதியான கோலிபாரின் பகுதியில் உள்ள 140 ஏக்கர் நிலத்தை தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு மகாராஷ்டிர அரசு அளித்தது. ஆனால் அந்த இடத்தில் ஏராளமானோர் குடிசைகள் அமைத்து தங்கியிருந்தனர்.

இதனையடுத்து குடிசைவாசிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி கடந்த 20-ஆம் தேதி கோலிபாரின் பகுதியில் மேதா பட்கர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

மேதா பட்கரின் போராட்டத்துக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆதரவு குவிந்தது. குடிசைவாசிகள் மறுவாழ்வுத் திட்டத்துக்கு சம்மதித்து விட்டதாக போலியாக கையெழுத்திட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று மேதா பட்கர் குற்றம்சாட்டினார். மேலும் மகாராஷ்டிர மாநில குடிசைப் பகுதிச் சட்டம் 1971-ன் 3கே பிரிவை நீக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார். ஏனெனில் இந்தப் பிரிவு, எவ்வித அனுமதியுமின்றி குடிசைவாசிகளை அகற்ற மாநில அரசு அதிகாரம் அளிக்கிறது.

எனினும் மாநில அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து மாறாததால் மேதா பட்கரின் உண்ணாவிரதம் தொடர்ந்து 9 நாள்கள் வரை நீடித்தது.

இந்நிலையில் ஆட்சியர் நிர்மல் தேஷ்முக், மேதாபட்கரை சனிக்கிழமை சந்தித்தார். அப்போது அவரது கோரிக்கைகளை ஏற்று பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்தார். இதனையடுத்து மேதா பட்கர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் என்று, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, தேசிய மக்கள் கூட்டணி அமைப்பின் உறுப்பினர் மதுரேஷ் குமார் தெரிவித்தார்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய இரு குழுக்களை அமைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.

No comments: