Saturday, June 4, 2011

நேரடி போராட்டத்தில் ம.தி.மு.க. குதிக்கும் : கேரள முதல் அமைச்சருக்கு வைகோ கண்டனம் .


ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டியே தீருவோம் என்று கேரளத்தின் புதிய முதல் அமைச்சர் உம்மன் சாண்டி கடந்த 4 நாட்களுக்குள் 2வது முறையாக கூறி உள்ளார். 5 ஆண்டுக்காலம் கேரளத்தில் ஆட்சி நடத்திய மார்க்சிஸ்ட் கட்சி முதல் அமைச்சர் அச்சுதானந்தன் புதிய அணை கட்டுவோம் என்று கூறி வந்தார். அவரது அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை பொறுப்பு வகித்த பிரேமச்சந்திரன், பென்னிகுக், கட்டிய அணையை உடைப்போம் என்றும் புதிய அணை கட்டுவோம் என்றும் தொடர்ந்து சொன்னார்.

முல்லைப் பெரியாறு அணையில், 999 ஆண்டுகளுக்கான பாசன உரிமையைத் தமிழகம் பெற்று இருக்கிறது. கேரள அரசு கட்டத் திட்டமிடுகின்ற புதிய அணை, பள்ளமான இடத்தில் அமைவதால் கேரள அரசு நினைத்தாலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும், பின்னர் 145 அடி உயரத்துக்கும் அதன் பின்னர் 152 உயரம் வரையிலும் படிப்படியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் கேரள அரசு இதற்கு எந்தவிதத்திலும் முட்டுக் கட்டை போடுகின்ற வேலையில் ஈடுபடக்கூடாது என்றும், 2006 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்புத் தந்தது. அதை எதிர்த்து, அச்சுதானந்தன் போன்றவர்களின் வற்புறுத்தலால், கேரள அரசு உச்சநீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து, சட்டமன்றத்தில், ஒரு சட்டத்தை நிறைவேற்றி, 136 அடிக்கு மேல் தண்ணீரை உயர்த்த முடியாது என்றும், முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதற்கும் எங்களுக்கு உரிமை உண்டு என்றும் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.

அப்போதைய அ.தி.மு.க.அரசு அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. 3 ஆண்டுகளுக்கு மேல் வழக்கை இழுத்தடித்து தமிழ்நாட்டிற்கு நியாயமான தீர்ப்பு வர இருந்த நிலையில் அநீதியாக ஒரு உத்தரவை வெளியிட்டது. பென்னி குக் கட்டிய அணையின் வலுவை ஆய்வு செய்வதற்கும், புதிய அணை கட்டுவது குறித்தும் ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமித்தது.

இந்த நிலையில் புதிய அணையைக் கட்டுவோம் என்று கேரள அரசு இப்போது அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால், தென்பாண்டிச் சீமையில் 5 மாவட்டங்கள் அடியோடு பாசன வசதியையும், குடிநீர் வசதியையும் இழக்கும் அபாயம் தலைக்குமேல் இப்போது கத்தியாகத் தொங்குகிறது. கேரள மாநில அரசின் அக்கிரமமான போக்கைத் தடுக்க வேண்டிய கடமையை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்யவே இல்லை. கேரள அரசு பென்னி குக் அணையில் கை வைக்கவோ, புதிய அணை கட்டவோ முனைந்தால், நிரந்தரப் பொருளாதார முற்றுகையைத் தமிழகம் ஏற்படுத்தும் என எச்சரிக்க விரும்புகிறேன்.

தமிழக முதல் அமைச்சர் நம் மாநிலத்தின் முக்கிய வாழ் வாதாரப் பிரச்சினையான இந்தப் பிரச்சினையில், கேரள அரசின் தவறான போக்கைத் தடுத்து நிறுத்தவும், மத்திய அரசுக்கு நிலைமையின் விபரீதத்தை உணர்த்தவும், உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தைக் காக்க, மறுமலர்ச்சி தி.மு.க. நேரடியாக கிளர்ச்சியில் ஈடுபடும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

No comments: