Saturday, June 4, 2011

பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் தொடங்கினார் ; லட்சக்கணக்கானோர் பங்கேற்பு.


ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக யோகா குரு பாபா ராம்தேவ் அறிவித்தார். நாடெங்கும் இது எழுச்சியை ஏற்படுத்தியதால் கலக்கம் அடைந்த மத்திய அரசு ராம்தேவ் உண்ணாவிரதத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திட வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை செய்தது.

மத்திய மந்திரிகள் கபில் சிபல், சுபோத்காந்த் சகாய் இருவரும் நேற்று சுமார் 6 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் ராம்தேவுடன் சுமூக முடிவை எட்ட இயலவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து சனிக்கிழமை (இன்று) முதல் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதம் திட்டமிட்டப்படி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி டெல்லிராம் லீலா மைதானத்தில் இன்று காலை யோகா குரு பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

ராம்லீலா மைதானத்துக்கு அவர் அதிகாலை 4.50 மணிக்கு வந்தார். ஏற்கனவே அந்த மைதானத்தில் திரண்டிருந்த பல்லாயிக்கணக்கான சீடர்களும், பொது மக்களும் பலத்த கரகோஷம் எழுப்பி, ராம்தேவை வரவேற்றனர். ராம்தேவும் முக்கிய பிரமுகர்களும் அமர்வதற்காக சற்று உயரமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு சென்று ராம்தேவ் அமர்ந்தார். முதலில் அவர் சிறிது நேரம் யோகா பயிற்சிகள் செய்தார். பிறகு பஜனைப் பாடல்கள் பாடப்பட்டன. யோகாவும், பஜனைப்பாடல் நிகழ்ச்சிகளும் சுமார் 2 மணி நேரம் நடந்தன.

இதையடுத்து உண்ணாவிரதம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. மேடையில் ராம்தேவுடன் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுவாமி ரிதம்பராவும் அமர்ந்தார். ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதத்துக்காக அமைக்கப்பட்டுள்ள 2 1/2 லட்சம் சதுரஅடி பந்தல் நேற்று முதலே திருவிழா கோலமாக காணப்பட்டது. இன்று காலை உண்ணாவிரத பந்தல் நிரம்பி வழிந்தது. சாதி, மத வேறுபாடியின்றி பல்லாயிக்கணக்கானவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். சீக்கிய, ஜெயின், முஸ்லிம் மத தலைவர்களும் உண்ணா விரதத்தில் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உண்ணாவிரத மேடையில் அமர்ந்த சிறிது நேரத்தில் யோகா குரு பாபா ராம்தேவ்
உரையாற்றினார், அவர் கூறியதாவது :-

ஊழலில் இருந்து நாட்டை காப்பாற்றுவதற்காகவே இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. ஏழை- எளிய மக்கள் நல்ல வாழ்க்கை பெற இந்த உண்ணாவிரதப் போராட்டம் உதவும். முடியாதது எதுவுமே இல்லை. எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியும். நம்மை யாராலும் தோற்கடிக்க முடியாது. நமது உண்ணாவிரதத்தை நடத்த விடாமல் செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டது.

எனக்கு எதிரான அந்த சதி தோற்று போய் விட்டது. இது தொடர்பான எல்லா தகவல்களையும் இன்று நான் வெளியிடப் போவது இல்லை. நமக்கு எதிரான அந்த சதி என்ன? யாரால் அந்த சதி திட்டம் தீட்டப்பட்டது என்பதை உரிய நேரத்தில் சொல்வேன். நமக்கு ஆதரவு தரும் அரசியல் வாதிகளை வரவேற்கிறோம். அவர்கள் இங்கு வரலாம். ஆனால் இந்த மேடையில் அரசியல் பிரமுகர்கள் பேச அனுமதிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் பேச்சு முரண்பாடுளுக்கு வழி வகுத்து விடும்.

உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு ஒரு முக்கிய யோசனை சொல்ல விரும்புகிறேன். உங்களுக்காக இங்கு குடிநீர் மற்றும் எலுமிச்சை ஜூஸ் தயாராக உள்ளது. ஆனால் நிறைய குடித்து விடாதீர்கள். நம்மால் நாட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். ஊழலுக்கு எதிராக ஏற்கனவே கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஆதரவு தெரிவித்து மிஸ்டு கால் கொடுத்துள்ளனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் இந்தியாவும், இந்திய மக்களும் என்ன பெற்று விடப் போகிறார்கள் என்று நீங்கள் நினைக்கக் கூடும். இன்று இந்தியா காப்பாற்றப்பட்டுள்ளது. தொழில் கல்வியை தாங்கள் தாய் மொழியில் படிக்கும் வாய்ப்பை மக்கள் பெறப் போகிறார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், கால வரையற்ற இந்த உண்ணா விரதத்தால் இரண்டு விதமான நன்மைகள் கிடைக்கும். ஒன்று குண்டாக இருப்பவர்கள் உடல் நலம் பெறுவார்கள். இரண்டாவது நாடு வளம் பெற்று செழிப்படையும்.

இவ்வாறு ராம்தேவ் கூறினார்.

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் இந்தியாவின் சொத்து. அது மீட்கப்பட வேண்டும் என்று ராம்தேவ் பேசிய போது மக்களிடம் எழுந்த கரகோஷம் அடங்க வெகு நேரமானது. அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ராம்லீலா மைதானத்தில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். அதிரடிப் படை வீரர்களும் தயார் நிலையில் அங்கு வைக்கப்பட்டுள்ளனர். ராம்லீலா மைதானத்துக்குள் வரும் அனைவரும் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

ராம்தேவை தொடர்ந்து சுவாமி ரிதம்பரா பேசினார். அவர் பேசுகையில், நமது நாட்டில் நிறைய வல்ல பாய் படேல்கள் இருந்திருந்தால், ஊழலுக்கு எதிராக எங்களைப் போன்ற சாமியார்கள் உண்ணாவிரதம் இருக்க வந்திருக்க மாட்டோம் என்றார். போஜ்புரி மொழியில் சூப்பர் ஸ்டார் நடிகர் என்றழைக்கப்படும் மனோஜ் திவாரியும் உண்ணாவிர தத்தில் கலந்து கொண்டார். இதற்காக அவர் ஒரு மாதம் தன் படபிடிப்புகளை ரத்து செய்து விட்டதாக கூறினார்.

நேரம் செல்ல, செல்ல ராம்லீலா மைதானத்துக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. 10 மணிக்கு ராம்லீலா மைதானத்தை சுற்றி இருந்த பகுதிகளும் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. முக்கிய பிரமுகர்கள் மட்டும் ராம்தேவை சந்தித்து வாழ்த்தினார்கள். அப்போது மக்களிடம் எழுச்சி ஏற்படுத்தும் வகையில் ரகுபதி ராகவ ராஜாராம்.... என்ற பாடல் உள்பட பல தேசப்பக்தி பாடல்கள் பாடப்பட்டன. இடையிடையே ராம்தேவும், “மைக்”கில் பேசியபடி இருந்தார். ஊழலுக்கு எதிரான இந்த போராட்டத்துக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்போ அல்லது வேறு எந்த அமைப்போ நிதி உதவி செய்யவில்லை” இது மக்களால், மக்கள் நடத்தும் போராட்டம் என்று ராம் தேவ் அடிக்கடி கூறினார்.

மவுலவி ரிஸ்வி பேசுகையில், இது முல்லா உமரின் தலிபான் பகுதி அல்ல. இது இந்துஸ்தான் என்றார். இதை கேட்டு அரங்கமே அதிரும் வகையில் கரகோஷம் எழுந்தது. உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட பலர் ராம் தேவிடம் நிதி அன்பளிப்பு கொடுத்தனர். ஒருவர், ரூ.11 லட்சத்துக்கான காசோலையை கொடுத்தார். அப்போது ராம்தேவ், புகைப்படம் எடுப்பவர்களை பார்த்து, தாராளமாக நீங்கள் இதை படம் எடுக்கலாம். இது கறுப்புப் பணம் அல்ல என்றார்.

இதை கேட்டதும் ராம்லீலா மைதானம் முழுவதும் சிரிப்பலை எழுந்தது. ராம்தேவ் உண்ணாவிர தத்தை ஆதரித்து நாடெங்கும் மக்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். ராம்தேவ் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்காவில் உள்ள இந்தியர்களும் உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாஷிங்டன், நியூயார்க், ஹஸ்டன், தம்பா, நியூஜெர்சி, லாஸ்ஏஞ்சல், உள்பட 13 நகரங்களில் உண்ணாவிரதம் நடக்கிறது. அது போல ராம்தேவ் சீடர்கள் அதிகம் உள்ள மற்ற நாடுகளிலும் உண்ணா விரதப் போராட்டம் நடந்து வருகிறது. ராம்தேவ் உண்ணாவிரதம் இந்தியாவில் மட்டு மின்றி கடல் கடந்து வாழும் இந்தியர்களிடமும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments: