Saturday, June 4, 2011

ஒரு மாதத்துக்கு பிறகே கனிமொழி ஜாமீன் வழக்கில் தீர்ப்பு?


2ஜி வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், எம்பியுமான கனிமொழி யின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நீதிமன்றத்தின் ஒரு மாத கால கோடை விடுமுறைக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

இதனால் மேலும் ஒரு மாதம் கனிமொழி திஹார் சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

டெல்லி நீதிமன்றத்துக்கு ஒரு மாத கால கோடை விடுமுறை இன்று தொடங்கு வதால் நேற்றே தீர்ப்பு வெளியாகலாம் என்று கூறப்பட்டது. ஆனால், வெள்ளிக்கிழமைக்கான விசாரணைப் பட்டியலில் கனிமொழியின் வழக்கு இடம் பெறவே இல்லை.

இந் நிலையில் இன்று முதல் விடுமுறையும் ஆரம்பித்துவிட்டது. வரும் ஜூலை 4ம் தேதி தான் நீதிமன்றம் மீண்டும் திறக்கும். இதனால் இந்த வழக்கில் ஒரு மாதத்துக்குப் பிறகே தீர்ப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

அதே நேரத்தில் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி அஜித் பரிஹோகே விரும்பினால், நீதிமன்றத்தின் கோடை காலம் முடியும் முன்பே கூட எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வழங்கலாம் என்பதும் குறி்ப்பிடத்தக்கது.

அவர் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றத்துக்கு வந்து தனது தீ்ர்ப்பை வழங்கலாம். அல்லது தனது தீர்ப்பை நீதிமன்றத்தின் பதிவாளருக்கு அனுப்பி வைக்கலாம், அதை பதிவாளர் நீதிபதியின் சார்பில் நீதிமன்றத்தில் வாசிக்கலாம்.

ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. இதனால் கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வர ஒரு மாத காலம் ஆகலாம் என்றும், அதுவரை அவர் சிறையில் தான் இருந்தாக வேண்டும் என்றும் தெரிகிறது.

No comments: