Thursday, August 11, 2011

உட்கார்ந்த பரிவர்த்தன திரிகோணாசனம், பக்க்ஷிமோத்தாசனம், பார்சுவ பாதாசனம்.

உட்கார்ந்த பரிவர்த்தன திரிகோணாசனம்.
உட்கார்ந்த பரிவர்த்தன திரிகோணாசனம்

செய்முறை:

இரண்டு கால்களையும், `வி' வடிவில் விரித்தநிலையில் உட்காரவும். சற்றே முன்னோக்கி குனிந்து, வலது கையால் இடதுகால் கட்டைவிரலைப் பிடியுங்கள். அடுத்தபடியாக இடுப்பு, தோள்பட்டை, தலை ஆகிய மூன்று அவயங்களை இடப்பக்கமாக பின்னால் திருப்பவும்.

அப்போது உங்களின் இடது கை, தோள்பட்டைக்கு இணையாக பக்கவாட்டில் நீண்டிருக்கட்டும். இடது கை கட்டை விரலை, அப்படியே கண்களால் கூர்ந்து பாருங்கள். முதுகுத்தண்டு வளையலாகாது. முழங்காலையும் மடக்கக்கூடாது. கடைசியாக, ஆசனத்தை கலைத்து அடுத்த பக்கம் மாற்றி, முன்புபோல செய்யவும்.

பயன்கள்:

இடுப்புபிடிப்பு, முதுகுவலி, கழுத்துவலி, ஸ்பாண்டிலோஸிஸ் குணமாகும். தொந்தி குறையும். உடம்பு மெலிந்து அழகாகும். போலியோ நோயாளிகள் உட்கார்ந்த நிலையில் பயிற்சிசெய்து, மகத்தான பலன்களை பெறலாம்.


பக்க்ஷிமோத்தாசனம்.
பக்க்ஷிமோத்தாசனம்

செய்முறை:

இரு கால்களையும் முன்னோக்கி நீட்டி உட்காருங்கள். கைகளிரண்டையும் தலைக்குமேல் கொண்டுபோய், மூச்சுவிட்டுக்கொண்டே மெதுவாக முன்னோக்கி குனியுங்கள். அப்போது உங்களின் ஆள்காட்டி விரல், நடுவிரல்களும் முறையே இரண்டு கால்விரல்களையும் பற்றட்டும்.

கால்களை தூக்கக்கூடாது. முழங்கை கள் இரண்டும் தரையில் படுவது அவசியம். அடுத்தபடியாக, மெதுவாக தலைகுனிந்து, முழங்காலில் முகத்தை படரவிடுங்கள்.

பயன்கள்:

சிறுகுடல், பெருங்குடல் நன்கு இயங்கும். மலச்சிக்கல், செரிமானக் கோளாறு அகலும். வாய்வு பிரச்சினை இராது. மாதர்களுக்கு மாத விடாய் கோளாறு நீங்கும். கர்ப்பப்பை கோளாறு மறையும். இடை சுருங்கும்.மகப்பேறுவுக்கு பின் ஏற்படும் வயிற்று பெருக்கம் குறையும்.

பக்ஷிமோத்தாசனத்துக்கு `எமனை வெல்லும் ஆசனம்' என்கிற பட்டப்பெயருண்டு. ஆகவே, இதை தினந்தோறும் செய்துவந்தால், நோய்-நொடியின்றி நீண்டநாள் வாழ்வது, 100 சதவீதம் நிச்சயம்!


பார்சுவ பாதாசனம்.
பார்சுவ பாதாசனம்

செய்முறை:

முதலில், குத்தவைத்து உட்காருங்கள்.இடுப்பை இடப்பக்கமாக சரித்து, வலதுகாலை பக்கவாட்டில் கொண்டு போய், நேராக பின்னால் நீட்டவும். உடம்புக்கு முன்னால் இடது முழங்காலை மடித்து வையுங்கள். இரண்டு கை விரல்களும் வலது முழங்காலை தொடும் வகையில், பின்னோக்கி வளைந்து செல்லட்டும். இப்படியாக-இயல்பான சுவாசத்தில் 15 விநாடிகள் இருந்தபின், ஆசனத்தை கலைத்து பக்கம் மாற்றி செய்யுங்கள்.

பயன்கள்:

அடித்தொடை, புட்டம், அடிவயிறு பகுதியிலுள்ள அதிகப்படியான தசைகள் குறையும். ஜனன உறுப்புகளின் இயக்கம் சீராக இருக்கும். விரை வீக்கம், சிறுநீரக கோளாறு, குடலிறக்கம் அகலும். முதுகுவலி, மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கோளாறு, பெருந்தொந்தி நீங்கும்.

No comments: