தமிழகத்தில் மலையாளிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நாங்கள் எதிர்பாராதது. கேரளத்தில் உள்ள தமிழர்களைக் காக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதேபோல தமிழகத்திலும் மலையாளிகளைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை கேரள மக்களுக்கு எதிராக ஒரு தூசியைக் கூட தமிழக மக்கள் எழுப்பியதில்லை. அந்த அளவுக்கு அவர்களும் நமது சகோதரர்கள் என்ற எண்ணத்தில்தான் வாழ்ந்து வந்தனர், வருகின்றனர். ஆனால் முதல் முறையாக கேரளத்தவர்கள் மீது தமிழகத்தின் பல பகுதிகளில் எழுந்துள்ள கொந்தளிப்பு கேரள மக்கள் எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது. கேரள அரசும், கேரளாவில் வசிப்போரும் தமிழகத்திற்கு எதிராக எத்தனையோ செயல்பாடுகளில் ஈடுபட்டபோதிலும் தமிழக மக்கள் அதை பெரிய அளவில் எடுத்துக் கொண்டதில்லை. மேலும் மலையாள மக்களுக்கு எதிராக எந்தவகையான போராட்டத்திலும் ஈடுபட்டதில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களில் தமிழகத்தில் கேரள மக்களுக்கு எதிரான கொந்தளிப்பையும், தாக்குதலையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
நாம் என்ன செய்தாலும் தமிழக மக்கள் பொறுத்துக் கொள்வார்கள், பொங்கி எழ மாட்டார்கள் என்ற கேரளத்தின் எண்ணம் முதல் முறையாக தவறாகிப் போயுள்ளது. இதை கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவின் பேச்சு வெளிப்படுத்தியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புது அணை கட்டக் கோரி திருவனந்தபுரத்தில் சென்னிதலா உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணை மிகவும் பழமையானது. இதனால் கேரள மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
இதனால்தான் புதிய அணை கட்ட கேரள அரசு முடிவு செய்தது. இந்த அணை கட்டப்பட்டாலும் கூட தமிழகத்திற்கான தண்ணீர் அளவு குறைக்கப்பட மாட்டாது. உரிய நீரை முறையாக கொடுப்போம். இதில் எந்தவிதமான சந்தேகமும் யாருக்கும் வேண்டாம்.
எனவே தமிழக அரசும், தமிழக மக்களும் கேரளாவின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு புதிய அணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
நாங்கள் தமிழகத்திற்கு எதிராகவோ, அல்லது தமிழக மக்களுக்கு எதிராகவோ நடக்கவில்லை. அந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை. தமிழகத்தில் மலையாளிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது நாங்கள் எதிர்பாராத ஒன்று. இது துரதிர்ஷ்டவசமானது. இதைத் தவிர்த்திருக்க வேண்டும்.
அதேசமயம், கேரளாவில் வசிக்கும் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல தமிழகத்தில் வசிக்கும் கேரள மக்களையும் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் சென்னிதலா.
No comments:
Post a Comment