Saturday, June 11, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல் பண பரிமாற்றம்: சிபிஐ-அமலாக்கப் பிரிவு குழு லண்டன் பயணம்.


முறைகேடாக 2 ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது கோடிக்கணக்கான லஞ்சப் பணம் ஐரோப்பிய நாடுகள் வழியாக பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரிக்க 2 சிபிஐ அதிகாரிகள், 2 அமலாக்கப் பிரிவுகள் அடங்கிய குழு நாளை லண்டன் செல்கிறது.

முறைகேடான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு காரணமாக மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் துறை அறிவித்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள் ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக ரூ. 30,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியது.

இதற்கிடையே 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட போது இங்கிலாந்து உள்பட சில ஐரோப்பிய நாடுகள் வழியாக பண பரிமாற்றம் நடந்தது தெரிய வந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள், மத்திய அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் இடையே இந்த பணப் பரிமாற்றம் நடந்துள்ளது.

குறிப்பாக வரி ஏய்ப்புக்கு பேர் போன ஐல் ஆப் மேன் தீவுகள் மற்றும் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் உள்ள வங்கிகள் வழியாக இந்தப் பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளன.

இது தொடர்பான ஆதாரங்களை திரட்ட இந்த 4 பேர் கொண்ட விசாரணை குழு நாளை இங்கிலாந்து செல்கிறது. இவர்களுக்கு உதவ இங்கிலாந்து நிதித்துறை-காவல்துறை ஆகியவை தயாராக உள்ளன.

இதையடுத்து ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகியுள்ளவர்கள் மீதான பிடி மேலும் இறுகும் என்று தெரிகிறது.

முன்னதாக சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு மொரீசியஸ் சென்று விசாரணை நடத்தியதில் இந்த பணப் பரிமாற்றங்கள் குறித்து பல தகவல்கள் கிடைத்தன. அப்போது லண்டன் உள்பட ஐரோப்பிய நாடுகளிலும் இந்தப் பணப் பரிமாற்றங்கள் நடந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து முதலில் லண்டன் செல்லும் இந்தக் குழு பின்னர் தேவைப் பட்டால் பிற ஐரோப்பிய நாடுகளிலும் நேரில் சென்று விசாரணை நடத்தும் என்று தெரிகிறது.

இது தவிர அமலாக்கப் பிரிவின் மேலும் இரு குழுக்கள் சைப்ரஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் அடுத்த சில வாரங்களில் செல்ல இருக்கின்றன. அங்கும் ஸ்பெக்ட்ரம் பணம் பாய்ந்துள்ளது உறுதியாகியுள்ளதால், அது குறித்தும் விசாரிக்கப்படவுள்ளது.

1 comment:

Ashwin-WIN said...

//குறிப்பாக வரி ஏய்ப்புக்கு பேர் போன ஐல் ஆப் மேன் தீவுகள் மற்றும் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் உள்ள வங்கிகள் வழியாக இந்தப் பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளன.//
பய புள்ளங்க அந்தளவுக்கு பண்ணியிருக்குதுகளா... என்னாமா பிளான் பண்ணி பண்ணினாலும் கடைசியா இப்டி சொதப்பிட்டான்களே..
இன்டிலி ஓட்டு குத்தியாச்சு..:)
சிறையிலிருந்து ராசா எழுதிய கடிதம்.