Saturday, June 11, 2011

சமச்சீர் கல்வி வழக்கில் ஐகோர்ட்டு தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு "அப்பீல்”


தமிழகத்தில் பள்ளிக் கூடங்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வியை வழங்கும் சமச்சீர் கல்வி திட்டத்தை முந்தைய தி.மு.க. அரசு கொண்டு வந்தது. இதற்காக பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன. இந்த பாடப் புத்தகங்கள் தரமானதாக இல்லை என்று கூறி தமிழக அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்த போதே சட்டசபையில் சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமச்சீர் கல்வித் திட்டத்தை அரசு எதிர்க்கவில்லை. பாடத் திட்டத்தில் உள்ள குளறுபடிகள் நீக்கப்பட்டு திட்டம் நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்தும் ஐகோர்ட்டில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் இந்த மனுக்களை விசாரித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்துக்கு நேற்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். நீதிபதி தனது தீர்ப்பில், மாணவர்களின் நலன் கருதி பழைய கல்வி முறையை அமல்படுத்த இந்த நீதிமன்றம் அனுமதி மறுக்கிறது. தமிழக அரசு கொண்டு வந்த சட்ட மசோதாவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக கூறினார்.

2011-12-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறையையே அமல்படுத்த வேண்டும், அதே நேரம் சமச்சீர் கல்வி பாட புத்தகங்களில் தேவையான பக்கங்களை நீக்கவோ, சேர்க்கவோ தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்த நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.

இந்த வழக்கில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். ஐகோர்ட்டு உத்தரவால் சமச்சீர் கல்வி முறையை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே ஐகோர்ட்டின் இடைக்கால தடையை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் விடுமுறை கால பெஞ்ச்சில் அப்பீல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா ஆகியோர் நேற்று இரவு 3 மணி நேரம் அவசர ஆலோசனை நடத்தினார்கள். அப்போது கோர்ட்டு தடையை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது பற்றி கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது.

இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு வக்கீல்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக அரசு வக்கீல்கள் டெல்லி விரைந்துள்ளனர். அமைச்சர் சி.வி.சண்முகமும் இன்று காலை டெல்லி சென்றார்.

தற்போது சுப்ரீம் கோர்ட்டுக்கு கோடை கால விடுமுறை என்றாலும் விடுமுறை கால பெஞ்ச்சில் அப்பீல் செய்து 15-ந்தேதி பள்ளி திறப்பதற்குள் நல்ல முடிவை பெற்று விடுவோம் என்று அரசு வக்கீல் ஒருவர் தெரிவித்தார்.கோர்ட்டு நடவடிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும் 15-ந்தேதி திட்டமிட்டப்படி பள்ளிக் கூடங்கள் திறக்கப்படும். அதில் எந்த மாற்றமும் கிடையாது என்று கல்வி துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments: