Saturday, June 11, 2011

தயாநிதி - 2ஜி - தோண்டத் தோண்ட பூதம் !


ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) 2004ஆம் ஆண்டில் மத்திய அரசில் அதிகாரத்துக்கு வந்ததும் திமுகவுக்கு வருவாய் வரும் துறைகளான கப்பல் போக்குவரத்து, தொலைத் தொடர்பு போன்றவற்றை வலியுறுத்திப் பெற்ற கருணாநிதி, அரசியலுக்கும் நாடாளுமன்றத்துக்கும் புதுமுகமான தம் பேரன் தயாநிதியை தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக்கினார்.

தினகரன் நாளிதழில், "வெளியிட வேண்டாம்" என்று கருணாநிதி இட்ட கட்டளையையும் மீறி, திமுக அமைச்சர்களுள் "யாருக்குச் செல்வாக்கு அதிகம்?" என்று வெளியான கருத்துக் கணிப்பால் மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் திமுகவினரால் அடித்து நொறுக்கப்பட்டுத் தீவைத்துக் கொளுத்தப்பட்டதில் மூன்று அப்பாவி உயிர்கள் கருகிப் போக, அவர்களின் குடும்பங்கள் உருக்குலைந்து போயின.

அப்போது திமுகவுக்குள் ஏற்பட்ட குழப்பத்தில், "தயாநிதியைக் கட்சியை விட்டே தூக்க வேண்டும்" என்றுகூட திமுகவின் உயர்மட்டத்தில் பேசப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டு, தயாநிதி மத்திய அமைச்சரைவியில் இருந்து விலக, அவரின் இடத்துக்கு ஆ.ராசா வந்தார்.

தாமிருந்த இடத்தில் மற்றொருவரா; எப்படிச் சகிப்பார் தயாநிதி? தயாநிதிக்குத் தான் இத்துறையில் எப்படியெல்லாம் முறைகேடு செய்ய முடியும் என்று தெரியும்.

பதவியேற்ற சூட்டோடு, திமுக தலைமையைக் குஷிப்படுத்த, "தயாநிதி மாறன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது ரூ. 10,000 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருக்கிறது" எனக் குற்றம் சுமத்தினார் ஆ.ராசா.

திமுகவுக்கு எதிராக, "ரூ. 60,000 கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்" எனத் தமிழக மக்களின் வரவேற்பறைக்கு தொலைக்காட்சி மூலம் கொண்டு சென்று அறிமுகப்படுத்தி - திணித்தது கலாநிதி-தயாநிதி கூட்டணி. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தும் ராசாவின் முறைகேடான செயல்கள் குறித்தும் சன் டி.வி.யிலும் தினகரன் நாளிதழிலும் விலாவாரியாகச் செய்தி வெளியிட்டு நாறடித்தது.

இந்நிகழ்விற்கு பின்பே அதுவரை எதுவும் தெரியாதிருந்த வடநாட்டு அரசியல்வாதிகள், பத்திரிகைகள் தங்களது கவனத்தை ஸ்பெக்ட்ரம் பக்கம் திருப்பினார்கள்.

ராசாவின் பதவிக் காலத்தில் ஓருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் அளவிலான 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு, உச்சநீதிமன்ற உத்தரவால் விசாரணைக்கு வந்தபோது இந்தியாவின் கடைக்கோடி மக்கள்வரை அதைக் கொண்டு சேர்த்த பெருமை, சன் குழுமம் போன்ற காட்சி ஊடகங்களைச் சாரும்.

குடும்பக் கலகத்தால் சன் டிவிக்குப் போட்டியாகப் போர்க்கால அடிப்படையில் அதிரடியாகக் கலைஞர் டிவி தொடங்கப்பட்டது. அதற்கான முதலீடு எங்கிருந்து வந்தது என்ற வினாவுக்கு விடையாகத்தான் இப்போது கனிமொழி திகார் சிறையில் இருக்கிறார்.

திமுகவுக்கு எதிராகத் தாம் பறித்த குழியில் தாமே விழ நேரிடும் என தயாநிதி எதிர்பார்த்திருக்க மாட்டார். tragedy of tragedy ஆக, "ஸ்பெக்ட்ரம் ஊழல்" என முழக்கிய தயாநிதி மீதே ஸ்பெக்ட்ரம் தொடர்பான அறுநூறுகோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு பூமராங்காகத் திரும்பி வந்து இப்போது தாக்குகின்றது. ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கத் தாமதப்படுத்திய தயாநிதி, அந்நிறுவனம் மலேஷியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்குக் கைமாறியவுடன் ஸ்பெக்ட்ரம் உரிமம் விரைந்து வழங்கப்பட்டதாகவும் அதற்கு விலையாக அந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களால் சன் குழுமத்தின் 'சன்டைரக்ட்' நிறுவனத்தில் அறுநூறு கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஸிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ப்ரஸாந் பூஷன், தயாநிதி மீதுள்ள குற்றசாட்டுகளுக்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி வழக்கொன்றும் தொடுத்துள்ளார்.

"அம்பட்டன் குப்பையைக் கிளறினால் அத்தனையும் மயிர்" என்று கிராமப் பெருசுகள் சொல்வதுபோலவும் "தோண்டத் தோண்ட பூதம்" என்பது போலவும் மேலும் பல புகார்கள் தயாநிதி மீது எழுகின்றன. தயாநிதி தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது சன் டிவி தலைமை அலுவலகத்துக்கு அதாவது அறிவாலயத்துக்கு 323 பிஎஸ்என்எல் இணைப்புகள் ரகசியமாகக் கொடுக்கப்பட்டிருந்ததாகவும் அதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சுமார் 440 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது எனவும் புகார் எழுந்துள்ளது.

ஈழத்தில் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டபோது கூட டெல்லிக்குச் செல்ல மனமில்லாத கருணாநிதி, ஆ.ராசாவுக்குத் தொலைத் தொடர்புத் துறையைப் பெற்றுத் தருவதில் குறியாக இருந்து, டெல்லி சென்று, அனைத்து வகை மிரட்டல்களையும் ஆயுதங்களாக்கிப் போராடினார். ஆ.ராசாவின் திறமையால் ஸ்பெக்ட்ரம் வெடித்தது. இப்போதும் ஸ்பெக்ட்ரம் தொடர்புக்காகச் சிறையிருக்கும் கனிமொழியைப் பார்ப்பதற்காகவே டெல்லி சென்று வந்தார். கருணாநிதியின் டெல்லிப் பயணங்கள் எல்லாம் ஸ்பெக்ட்ரம் தொடர்பாகவே அமைந்து விட்டன. மொத்தத்தில் கருணாநிதியின் டெல்லிப் படையெடுப்பு, "மலையும் மலை சார்ந்ததும் வயலும் வயல் சார்ந்ததும்" என்பது போல "ஸ்பெக்ட்ரமும் ஸ்பெக்ட்ரம் சார்ந்ததும்" என்றாகிப் போனது, இது அவரது அரசியல் வாழ்வில் கறுப்பு அத்தியாயமே!

ஆ.ராசா மீது ஸ்பெக்ட்ரம் குற்றச்சாட்டு எழுந்த போது, "ராசா குற்றமற்றவர்" என நற்சான்று வழங்கிய கருணாநிதி, ஆபத்துக்குக் கை கொடுக்கும் 'தலித்' ஆயுதத்தைக் கையில் எடுத்தபோது அதன் முனை முறிக்கப்பட்டது. கனிமொழி மீது வழக்கு வந்தபோது, பெண் என்றும் தம் குடும்பத்தின் மீதான பழிவாங்கல் என்றும் கருணாநிதி புலம்பினார். கொஞ்ச காலம் ஊடலாக இருந்து, சன் டிவி இலாபத் தொகையில் தம் பங்காகக் கிடைத்த 100 கோடியைக் கையில் வாங்கிக் கொண்டு, கண்கள் பனிக்க இதயம் இனிக்க மீண்டும் சேர்த்துக் கொண்டதோடு, ஜவுளித் துறை அமைச்சராக்கிய பேரன் தயாநிதியையும் அதே ஸ்பெக்ட்ரம் சுற்றி வளைத்துள்ளது. இப்போது என்ன சொல்லப் போகிறாரோ கருணாநிதி.

வளம் கொழிக்கும் துறைகளுள் ஒன்றான தொலைத் தொடர்புத் துறையில் வெளியே தெரியாமல் கோடிக் கணக்கில் கொள்ளையடிக்கலாம்; அது காமதேனு, கற்பக விருட்சம்; விரும்பிய அளவு கறக்கலாம் என்பதை அறிந்து கொண்டதால்தானோ என்னவோ, அத்துறையைப் பெற அனைத்துக் கட்சிகளும் போட்டியிட்டுள்ளன. காங்கிரஸ் அமைச்சரான சுக்ராம் காலம் முதல் பா ஜ கட்சியைச் சேர்ந்த ஜக்மோகன், பாஜக கூட்டணியில் இருந்த ராம்விலாஸ் பாஸ்வான், பாஜகவைச் சேர்ந்த ப்ரமோத் மஹாஜன், அடுத்து வந்த அருண்ஷோரி என, அத்துறைக்கு அமைச்சராக வந்த யாரும் குற்றச்சாட்டிலிருந்து தப்பவில்லை.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2010, டிசம்பர் 8ஆம் தேதி இப்படிச் சொன்னது:

"இந்தப் பிரச்சனையில் இழப்பு 1 இலட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமன்று. இதைவிட அதிகமாகவும் இருக்கக் கூடும். விசாரணையின் தொடக்கத்திலேயே நாங்கள் தீர்ப்பளிக்க விரும்பவில்லை. ஆனால் 2001ஆம் ஆண்டு நடைபெற்றவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். சிபிஐதான் இதுகுறித்து விசாரணை செய்து உண்மையைக் கண்டு பிடிக்க வேண்டும்."

ஆ. ராசாவுக்கு முன்னர் தொலைத் தொடர்பு அமைச்சராகப் பதவி வகித்த தயாநிதி, அதற்கு முன் பாஜக அரசில் இத்துறை அமைச்சர்களாக இருந்த ஜக்மோகன், ராம் விலாஸ் பஸ்வான், பிரமோத் மகாஜன், அருண்ஷோரி மற்றும் சில காலம் தொலைத் தொடர்பு அமைச்சகத்தை தன் பொறுப்பில் வைத்திருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இவர்களில் அருண்ஷோரியின் பதவிக்காலத்தில்தான், "முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை" என்ற கொள்கை அறிமுகப்படுத்தப் பட்டதாகக் கூறப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் முறைகேடுகளுக்கு வழிவகுத்ததே இந்தக் கொள்கைதான் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நடைமுறையைக் கொண்டு வர என்ன காரணம்?

ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மட்டுமின்றி அத்துறையில் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட அனைவரையும் கட்சி வேறுபாடு பாராமல் நீதிமன்றத்தில் நிறுத்திச் சட்டப்படி உரிய தண்டனை வாங்கிக் கொடுப்பதில்தான் இந்திய ஜனநாயக மாண்பின் மேன்மையும் உயிர்ப்பும் இருக்கின்றன என்பதை அரசு மறக்க வேண்டாம்.

inneram.com - ரஸ்ஸல்.

No comments: