Thursday, July 28, 2011

குற்றாலத்தில் சீசன் உச்சக்கட்டம் : அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஜோராக கொட்டுகிறது.

குற்றாலத்தில்  சீசன்  உச்சக்கட்டம்: அனைத்து அருவிகளிலும்  தண்ணீர் ஜோராக கொட்டுகிறது

குற்றாலத்தில் சீசன் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. அனைத்து அருவிகளில் தண்ணீர் அதிகளவு கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜுன் மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை 3 மாதங்கள் சீசன் காலம் ஆகும். இந்தாண்டு சீசன் ஜூன் 1ந்தேதி துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் அருவிகளில் தண்ணீர் நன்றாக கொட்டியது. அதன் பிறகு சாரல் ஒன்றிரண்டு நாட்கள் மட்டும் பெயரளவிற்கு காணப்பட்டது. இதனால் அருவிகளில் தண்ணீர் பெருமளவு குறைந்து விட்டது.

இந்த நிலையில் தென்மேற்கு மூலம் கேரளா மலைப்பகுதிகளில் தீவிர மழை பெய்து வருவதன் காரணமாக கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குற்றாலம் பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து பொழிந்து வருகிறது. இதனால் சீசன் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டுகிறது. மெயினருவில் பாதுகாப்பு வளைவின் மீதும், ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதே போல் புலியருவி, பழையகுற்றாலம் அருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவிகளிலும் தண்ணீர் அதிகளவு கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது குற்றாலத்தில் சாரல் திருவிழா நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.

இதனால் மெயினருவி பகுதியில் குளிப்பதற்கு கூட்டம் அதிகளவு காணப்படுவதால் போலீசார் நீண்ட வரிசையில் நிறுத்தி சிறு, சிறு குழுக்களாக நின்று குளிக்க அனுமதித்து வருகின்றனர்.

மற்ற அருவிகளில் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர். இன்று காலையிலும் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை சுற்று வட்டார பகுதியில் சாரல் மழை பொழிந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments: