சேலம் அங்கம்மாள் காலனி நிலம் அபகரிப்பு வழக்கு மற்றும் சேலம் 5 ரோடு பிரிமியர் மில் நிலம் அபகரிப்பு வழக்கு ஆகிய 2 வழக்குகளில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 நாட்கள் விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிந்து நேற்று மாலை அவர் சேலம் 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சரத்ராஜ் முன்பு ஆஜர் செய்யப்பட்டார்.
தினமும் காலை 8 மணிக்கு அவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இன்று காலை 8 மணிக்கு வீரபாண்டி ஆறுமுகம் சேலம் டவுன் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடவந்தார்.
அவரது வக்கீல் மூர்த்தி ஒரு நோட்டு வாங்கி வந்து இருந்தார். அந்த நோட்டில் வீரபாண்டி ஆறுமுகம் கையெழுத்து போட்டு போலீசாரிடம் கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இதை சந்திப்பேன். நீதிமன்றத்தில் நான் நிரபராதி என்று நிரூபிப்பேன். 3 நாட்கள் என்னிடம் போலீசார் விசாரித்தார்கள். இதற்கு நான் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து பதில்கள் தெரிவித்தேன்.
தி.மு.கவினர் மீது பொய் வழக்கு போட்டு அச்சுறுத்தி விடலாம் என்றும், தி.மு.வை கலங்கப்படுத்தி விடலாம் என்றும் நினைக்கிறார்கள். அது நடக்காது. எங்களை மிரட்டினாலோ, அச்சுறுத்தினாலோ நாங்கள் பயந்து விடமாட்டோம். தொடர்ந்து கழக பணியாற்றுவோம். பொய் வழக்குகளை போடுவதால் எங்களை அச்சுறுத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
வீரபாண்டி ஆறுமுகம் நடந்து வந்து காரில் ஏற சென்றார். அப்போது நிர்வாகிகள் பாண்டித்துரை, அன்வர், மண்டல தலைவர் அசோகன், கவுன்சிலர் கேபிள் சுந்தர் ஆகியோர் அவரிடம் வந்து நேற்று மாலை முதல் தி.முகவினரை போலீசார் கைது செய்து வருகிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிடித்து செல்கிறோம் என தெரிவிக்கிறார்கள் என்றனர்.
இதனால் வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் சேலம் டவுன் போலீஸ் நிலையம் வந்தார். உதவி கமிஷனர் காமராஜிடம் ஏன் தி,மு.கவினரை கைது செய்கிறீர்கள். அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? என கேட்டார். அதற்கு உதவி கமிஷனர் காமராஜ், நேற்று டவுன் போலீஸ் நிலையம் அருகே ஆட்டோவை சிலர் தாக்கி விட்டனர்.
இதில் ஆட்டோ டிரைவர் காயம் அடைந்துள்ளார். இதன் பேரில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதை கேட்ட வீரபாண்டி ஆறுமுகம் வக்கீல்கள் மூர்த்தி, சிவபாஸ்கரன், துரைராஜ், சக்திவேலை அழைத்து யார் கைது செய்யப்பட்டவர்களை ஜாமீனில் எடுக்க உதவுங்கள் என தெரிவித்து விட்டு காரில் ஏறி வீட்டிற்கு சென்றார்.
No comments:
Post a Comment