Thursday, July 28, 2011

2 ஜி முறைகேடு : சிதம்பரம், சுப்பாராவ் மீது பெகுரா குற்றச்சாட்டு.



2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவுக்கு தொடர்பு இருப்பதாக, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா புதிய புகார் கூறியதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய தொலை தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, அந்த துறையின் முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி கைதான பெகுரா, கடந்த 6 மாதங்களாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது தொடர்பான விசாரணை, டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனி கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் விவாதத்தை தொடர்ந்து, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் பெகுரா தரப்பு வாதம் நேற்று நடைபெற்றது.

ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவுக்கும் தொடர்பு

ஆ.ராசா தரப்பு வாதத்தின்போது, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி ஆகியோரின் பெயர்களை இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தி கூறப்பட்டது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற பெகுராவின் வாதத்தின்போது, ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவின் பெயரை குறிப்பிட்டு புகார் கூறினார்.

பெகுரா சார்பில் வாதிடுகையில், "ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்குவதற்கான நுழைவு கட்டணம் கடந்த 2001-ம் ஆண்டில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியின்போது ரூ.1650 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நுழைவு கட்டணத்தை மறுபரிசீலனை செய்வதற்காக, 2007-ம் ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி அன்று நடைபெற்ற கூட்டத்தில் அப்போதைய நிதித்துறை செயலாளர் (தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர்) டி.சுப்பாராவ் கலந்து கொண்டார்.

ப.சிதம்பரம்

தொடக்கத்தில் இந்த கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கூறி அவர் ஆட்சேபனை கிளப்பினார். ஆனால் அப்போதைய தொலை தொடர்பு துறை செயலாளர் டி.எஸ்.மாத்தூர், பழைய கட்டண விகிதம் நீடிப்பதற்கு ஆதரவு தெரிவித்தார்.

அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். பழைய கட்டணமே தொடர்ந்து நீடிப்பதற்கு இந்த கூட்டத்தில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு இருந்தால், பிரச்சினை மத்திய அமைச்சரவையின் முடிவுக்குப் போய் இருக்கும்.

நான் மட்டும் பலிகடாவா?

ஆனால், முதலில் ஆட்சேபனை தெரிவித்த டி.சுப்பாராவ் தனது ஆட்சேபனையை பின்னர் வாபஸ் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து பழைய நுழைவு கட்டணத்துக்கு ஒப்புதல் தெரிவித்த குறிப்பில் அனைவரும் கையெழுத்திட்டனர்.

எனவே, இந்த கொள்கை முடிவு எடுத்ததில் மத்திய அமைச்சரவைக்கும் கூட்டுப் பொறுப்பு உள்ளது. மத்திய அரசு பகிரங்கமாக இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அப்படி இருக்கும்போது என்னை மட்டும் இதில் ஏன் பலிகடா ஆக்க வேண்டும்?

அதிகாரம் இல்லை

அரசின் கொள்கை முடிவுகள் பற்றி விசாரித்து தீர்ப்பளிப்பதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது. நான் ஒரு அதிகாரி. கொள்கைகளை வகுப்பதில் எனக்கு எந்த பங்கும் இல்லை. அரசு வகுக்கும் கொள்கைகளை அமல்படுத்துவது மட்டுமே எனது பணியாகும்.

அந்த கொள்கை மோசமானதா? என்பதை முதலில் முடிவு எடுக்க வேண்டும். அதன்பிறகுதான் மற்றவர்களின் தவறான செயல்பாடு பற்றி நாம் பேச முடியும். ஆனால், ஒரு கொள்கை சரியா, இல்லையா? என்பது இந்த கோர்ட்டின் அதிகார வரையறைக்கு அப்பாற்பட்டது.

முழுமையான சட்ட மீறல்

எனவே இந்த வழக்கில் தவறாக சேர்க்கப்பட்டு இருக்கும் என்னை விடுவிக்க வேண்டும். எனக்கு முன்பு தொலைத் தொடர்பு துறையின் செயலாளராக பணிபுரிந்த டி.எஸ்.மாத்தூர், இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

அவரை சாட்சியாக சேர்த்திருப்பதே தவறு. எனவே சாட்சியாக இருக்க வேண்டிய ஒருவரை குற்றவாளியாகவும், குற்றவாளியாக இருக்க வேண்டியவரை சாட்சியாகவும் சேர்க்கப்பட்டு இருப்பது, சட்ட நடைமுறைகளை முழுமையாக மீறிய செயலாகும்''.

இவ்வாறு பெகுரா சார்பில், வக்கீல் அமன் லெகி மேற்கண்டவாறு வாதாடினார்.

சி.பி.ஐ. குற்றச்சாட்டு

சி.பி.ஐ. தரப்பு வாதத்தில், பால்வாவின் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்து ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் பெகுராவுக்கு முக்கிய பங்கு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பெகுராவுக்கு எதிராக கிரிமினல் சதி, ஊழல் மற்றும் மோசடி போன்ற குற்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments: