தமிழகத்தில் மாநில அரசு பாடத் திட்டம், மெட்ரிகுலேஷன், ஓரியன்டல் மற்றும் ஆங்கிலோ இந்தியன் என நான்கு பாடத் திட்ட முறைகள் செயல்பட்டு வந்தன. இவற்றை ஒருங்கிணைத்து அனைவருக்கும் சமச்சீரான கல்வித் திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு முடிவு செய்தது.
இதுதொடர்பாக குழு அமைத்து ஆராயப்பட்டது. அதன் இறுதியில், சமச்சீர் கல்வித் திட்டத்தை திமுக அரசு அறிமுகம் செய்தது.
தொடக்கத்தில் 1 மற்றும் 6 ஆகிய இரு வகுப்புகளுக்கு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு இது அறிமுகமானது. இந்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும், அதாவது 10ம் வகுப்பு வரை இத்திட்டத்தை அறிமுகப்படுத்த திமுக அரசு திட்டமிட்டிருந்தது.
இதற்காக, சுமார் 200கோடி ரூபாய் செலவில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயார்நிலையில் உள்ளது.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, புதியதாக பொறுப்பேற்ற. அ.தி.மு.க. அரசு, சமச்சீர் கல்வி பாடத் திட்டம் தரமானதாக இல்லை. எனவே, இந்த ஆண்டு அதை நடைமுறைப்படுத்த இயலாது. என்று அறிவித்தது.
இதனால், “சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும், என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. உடனே சட்டசபையில் சமச்சீர் கல்வி திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. சமச்சீர் கல்வித் திட்டத்தை அடுத்த ஆண்டுக்கு தமிழக அரசு ஒத்திவைத்தது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சமச்சீர் கல்வித் திட்டம் தொடரும் என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், 1, 6 வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி திட்டம் தொடரலாம். மற்ற வகுப்புகளுக்கு என்ன செய்யலாம் என்பது குறித்து குழு அமைத்து பரிசீலிக்க வேண்டும். அந்த ஆய்வறிக்கை அடிப்படையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன்படி தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விசாரணையும் முடிவடைந்து விட்டது.
இந்த நிலையில், இன்று பிற்பகலில் தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் தனது தீர்ப்பை அறிவித்தது.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டம் இந்த ஆண்டே அமல்படுத்தப்பட வேண்டும்.
1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டமே நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதற்கு முரணாக, சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒத்திவைக்கும் தமிழக அரசின் சட்டத் திருத்தம் ரத்து செய்யப்படுகிறது.
ஒன்றாம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வியை தொடரலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.இந்த நிலையில் ஏனைய வகுப்புகளுக்கும் இதே கல்வி திட்டம் தொடர வேண்டும்.
தமிழகத்தில் பழையப் பாடத் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்திய நிலையில் மீண்டும் பழைய பாடத் திட்டத்துக்கு மாணவர்களை இழுத்து செல்வதை அனுமதிக்க முடியாது.
இது ஒரு கோடியே 38 லட்சம் மாணவ - மாணவியர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும். எனவே இந்த ஆண்டே சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
மாணவர்களுக்கான சமச்சீர் கல்வித் திட்ட பாடப் புத்தகங்களை இந்த மாதம் ஜூலை 22-ந் தேதிக்குள் வழங்க வேண்டும்.
தமிழக அரசு அமைத்த சமச்சீர் கல்வி ஆய்வுக்குழு பரிந்துரைப்படி ஏதேனும் பாடத் திட்டங்கள் மாற்றம் செய்ய வேண்டியதிருந்தால் அதை தெளிவுபடுத்தும் வகையில் குழு அமைத்து மாற்றம் செய்து துணை பட்டியல் இணைப்பாக தயார் செய்து 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும்.
நிபுணர் குழு பரிந்துரைகள் நிராகரிப்பு
முன்னதாக தமிழக அரசு அமைத்த 9 பேர் கொண்ட நிபுணர் குழு 700 பக்க ஆய்வறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. இந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்த அனைத்து பரிந்துரைகளையும் உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் மதியம் 12.45 மணிக்கு தீர்ப்பை படிக்கத் தொடங்கி 1.05 மணிக்கு முடித்தனர்.
சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment