Monday, July 18, 2011

தமிழகத்தில் விரைவில் மின் கட்டணம் உயர்த்தப்படும் .



தமிழகத்தில் விரைவில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என தெரியவருகிறது. அனைத்து பிரிவினருக்கும் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து விரிவான அறிக்கை ஒன்றை அளிக்குமாறு மின் வாரியத்தை தமிழக அரசு கோரியுள்ளது.

தமிழக மின்வாரியத்தில் இதுவரை ரூ.40,300 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வரவுக்கும் செலவுக்கும் இடையே ரூ.10,000 கோடி அளவுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. அனைத்துப் பிரிவுகளுக்கும் கடந்த 10 ஆண்டுகளாக மின்கட்டணம் உயர்த்தப்படாத நிலையில் இந்த இழப்பு குவிந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

சினிமா தியேட்டர்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்ற சில துறைகளுக்கு மட்டும் கடந்த ஆண்டு ஓரளவு மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இது இழப்பை ஈடுகட்ட போதுமானதாக இல்லை. விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்துக்கு மட்டும் தமிழக அரசு ரூ. 6000 கோடி செலவிடுகிறது. புதிதாக தொடங்கப்படும் சில பன்னாட்டு பெருந்தொழில் நிறுவனங்களுக்கும் மின்கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

எனவே பணக்கஷ்டத்தில் தமிழ்நாடு மின்வாரியம் சிக்கியுள்ளது. இதிலிருந்து அதை மீட்கத்தான் மத்திய அரசிடமிருந்து முதல்வர் ஜெயலலிதா அண்மையில் பெருமளவு நிதியுதவி கோரினார்.

ஆயினும் மின்வாரியத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தமிழக அரசு வந்திருப்பதாக தெரிகிறது. எனவேதான் கட்டண உயர்வு குறித்து யோசனை தெரிவிக்குமாறு மின்வாரியத்தை அரசு கோரியுள்ளது. அவர்கள் எந்தப் பிரிவுக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தலாம் என்பது குறித்து ஆராய்ந்து கூறுவார்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் மின்கட்டணம் குறைவு என்று கூறப்படுகிறது. எனவே எந்த பிரிவு அதிக இழப்பை சந்தித்து வருகிறது? இதை ஈடுகட்ட என்ன செய்ய வேண்டும்? எவ்வளவு கட்டணம் உயர்த்தலாம் என்பது குறித்து விரிவான அறிக்கை ஒன்றை மின்வாரியம் அளிக்கும் என்றார் அவர்.

இதை அரசு ஆராய்ந்து கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும். இதற்கு எப்படியும் இரண்டு மாதங்கள் ஆகலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments: