Wednesday, July 20, 2011

வீரபாண்டியார், சட்டவிரோத கும்பலின் தலைவரா?


தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகம், 23 கோடி ரூபாய் ஏப்பம் விட்டுவிட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சருடன் சேர்த்து 11 பேர்மீது 8 குற்றப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவாகியுள்ளது. அந்தப் பிரிவுகளில் ஒன்று, ‘சட்டவிரோதமான கும்பல்!’

சேலம் ஐந்து ரோடுக்கு அருகே பிரிமியர் ரோலர் ப்ளவர் மில் இயங்கிவந்தது. இதில்தான் கைவைத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர்.

குறிப்பிட்ட மில்லின் உரிமையாளர் வெங்கடாசலம், ஆடிட்டர் ஒருவரிடம் 3 கோடி ரூபாய் கடன் வாங்க நேர்ந்தது. அதைத் திருப்பிக் கொடுக்க தயாரானபோது, அமைச்சர் காட்சிக்குள் வந்திருக்கிறார்.

“வாங்கிய கடனைத் திருப்பியெல்லாம் கொடுக்க முடியாது. அதற்காக மில்லை கொடுத்துவிட வேண்டும்” என்று அமைச்சர் மிரட்டவே, மில் அமைச்சருக்கு கைமாறியது. அதன்பின், அந்த மில்லை, பிரபல ஜவுளிக்கடை அதிபர் சீனிவாசனிடம், 30 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தார் வீரபாண்டி ஆறுமுகம்.

அந்தத் தொகையிலிருந்து மில்லின் உரிமையாளர் வெங்கடாசலத்து 7 கோடி ரூபாய் கொடுத்த முன்னாள் அமைச்சர், மீதமுள்ள தொகையில், தனக்கு 15 கோடி ரூபாய், மிரட்டலுக்கு உதவி வழங்கிய இன்ஸ்பெக்டர் லட்சுமணனுக்கு 4 கோடி ரூபாய், ஆடிட்டர் துரைசாமிக்கு, 4 கோடி ரூபாய் என்று பங்கீடு செய்து கொண்டார்.

மில்லை பறிகொடுத்த வேதனையில், வெங்கடாசலம் உயிரிழந்து விட்டார்.

தி.மு.க. ஆட்சியின் தூண்களில் ஒருவராக வீரபாண்டியார் விளங்கிய காரணத்தால், இதுபற்றி அப்போது யாரும் புகார் கொடுக்க முடியவில்லை. தற்போது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவருக்கு அடுத்தபடியாக ஆடிட்டர் துரைசாமி, இன்ஸ்பெக்டர் லட்சுமணன், மாநகர தி.மு.க., துணைச் செயலர் அழகாபுரம் முரளி என்று தொடங்கி, மொத்தம் 11 பேர்மீது வழக்கு பதிவாகியுள்ளது.

சேலம் போலீஸார் இதுபற்றித் தெரிவிக்கையில், வீரபாண்டியார் மற்றும் அவரது குழுவினருக்கு எதிராக வழக்கு பதிவாகியுள்ள சட்டப் பிரிவுகளைப் பட்டியலிட்டுள்ளனர். சட்டவிரோதமான கும்பல், ஆபத்தை விளைவிக்கும் ஆயுதங்களை வைத்திருந்தல், அத்துமீறி நுழைதல், மிரட்டுதல், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆயுதங்களை வைத்திருந்தல்… என்று நீள்கிறது அந்தப் பட்டியல்.

No comments: