Wednesday, June 22, 2011

பனமரத்துப்பட்டி அருகே பரபரப்பு : 50 அடி நீளத்துக்கு பூமி இரண்டாக பிளந்தது ; நில அதிர்வுக்கு பின்பு திடீர் மாற்றம் - மக்கள் பீதி.

பனமரத்துப்பட்டி அருகே பரபரப்பு:  50 அடி நீளத்துக்கு பூமி இரண்டாக பிளந்தது; நில அதிர்வுக்கு பின்பு திடீர் மாற்றம்-மக்கள் பீதி

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று அதிகாலை பல இடங்களில் அதிகாலை நேரத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அதிகாலை நேரத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதில் வீட்டில் இருந்த சமையல் பாத்திரங்கள் உருண்டு ஓடியது. அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்த மக்கள் வீட்டிற்குள் செல்லவே அச்சம் அடைந்தனர். ரிக்டர் அளவு கோலில் 2.9 பதிவாகி இருந்தது. ஒரு நிமிடம் மட்டுமே நீடித்த இந்த நில அதிர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் மட்டும் தொடர்ச்சியாக 2 முறை நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் வீடுகளுக்குள் இருந்த மக்கள் சத்தம் போட்டுக் கொண்டே ஓடி வந்தனர். தெரு முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூடிநின்று கொண்டு இதைப்பற்றியே பேசிக்கொண்டு இருந்தனர்.

மேலும் நில அதிர்வு தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தில் ஆய்வு செய்த சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூசணம் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

பொதுவாக நில அதிர்வு, நில நடுக்கம் ஏதாவது ஏற்பட்டால், அது தாக்கப்பட்ட பகுதியில் நிலப்பரப்பில் ஏதாவது மாறுதல் இருக்கும். அதே போல் நேற்று நடந்த பூமி அதிர்வுக்கு பின்னர் பனமரத்துப்பட்டி அருகே உள்ள குள்ளப்பநாயக்கனூர் பெரியகல்மேடு பகுதியில் பிரபு என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.

இந்த நிலத்தில் நேற்று திடீரென 50 அடி நீளத்துக்கு பூமி இரண்டாக பிளந்தது. சுமார் 10 அடி ஆழத்துக்கு குழி ஏற்பட்டு இருக்கிறது. இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு வந்து வேடிக்கை பார்த்தனர். நில அதிர்வுக்கு பின்னர் பூமியில் இது போன்ற மாற்றம் ஏற்பட்டு இருப்பதால் அவர்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர். குழிக்குள் வெற்றிடமாக இருக்கிறது. இந்த திடீர் குழி குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பூவியியல் அறிஞர்களும் அங்கு சோதனை நடத்த முடிவு செய்து இருக்கின்றனர்.

No comments: