Wednesday, June 22, 2011

ராமேசுவரத்தில் 25 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் : 23 மீனவர்களை விடுவிக்க போராட்டம்.

ராமேசுவரத்தில் 25 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் : 23 மீனவர்களை விடுவிக்க போராட்டம்

ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், கைது செய்து ஜெயிலில் அடைப்பதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் ராமேசுவரம் பகுதியில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையை சேர்ந்த வீரர்கள் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து துப்பாக்கி காட்டி மிரட்டி இங்கிருந்து சென்று விடுங்கள் என்று மிரட்டினர்.

இதைத் தொடர்ந்து மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர். ஆனாலும் இலங்கை கடற்படையினர் 5 படகுகளை சுற்றி வளைத்து அதிலிருந்த அழகேசன், கணேசன், முத்துக்காளை, ராமகிருஷ்ணன், ராமசாமி, விஜயன் உள்பட 23 பேர்களை சிறை பிடித்து தலைமன்னாருக்கு படகுகளுடன் கொண்டு சென்றனர்.

தலைமன்னார் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 1-ம் தேதி மீண்டும் அவர்களை ஆஜர்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தற்போது 23 மீனவர்களும் வவுனியா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக யாழ்பாணத்திற்கான இந்திய தூதர் மகாலிங்கம் கூறும்போது, சிறைபிடிக்கப்பட்ட 23 மீனவர்களும் நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாகவும், விரைவில் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவருக்கு கடிதம் ஒன்றும் அனுப்பியுள்ளார்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யும், அடிக்கடி தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்தும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

அனைத்து மீனவர்கள் சங்கங்களின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மீனவர்கள் சங்க தலைவர்கள் ஜேசுராஜா, போஸ், தேவதாஸ், அந்தோணி, எவரேட், மெரீஸ்மகத்துவம், தட்சிணாமூர்த்தி உள்பட 13 சங்கங்களின் தலைவர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. அதன்படி மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது. ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுகம், பாம்பன், தங்கச்சிமடம் கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் இன்று ஒரு நாள் மட்டும் ரூ.1 கோடி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மீன்பிடி தொழில் தொடர்பான லேத் பட்டறை, ஐஸ் கம்பெனி மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனிகளும் இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப் பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரம் மீனவர்கள் ராமேசுவரம் மீனவர்கள் கைதை கண்டித்து இன்று மீன்படிக்க கடலுக்கு செல்லவில்லை. சுமார் 275 விசை படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வேலை நிறுத்த போராட்டம் குறித்து கோட்டைபட்டினம் விசைபடகு மீனவ சங்க தலைவர் சின்ன அடைக்கலம் கூறியதாவது:-

கடந்த மாதம் வரை விசை படகு மீனவர்கள் மீன்பிடி தடை காலத்தால் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிப்படைந்த இருந்தனர். இந்நிலையில் சிங்கள படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்துள்ளனர். சிங்கள படையினர் தொடர் அட்டூழியத்தை நிறுத்த ஒரே ஒரு வழிதான் உள்ளது. உடனடியாக கச்சத்தீவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

மேலும் ராமேஸ்வரம் மீனவர்களை, சிங்கள படையினர் உடனே விடுதலை செய்ய, மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோட்டைபட்டினம் மீனவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

No comments: