Wednesday, June 22, 2011

மது விலக்கை அமல்படுத்த முடிவு : சத்தீஸ்கர் மாநிலத்தில் மது பானம் குடிக்க தடை; 263 கடைகள் மூடப்பட்டன.

மது விலக்கை அமல்படுத்த முடிவு: சத்தீஸ்கர் மாநிலத்தில் மது பானம் குடிக்க தடை; 263 கடைகள் மூடப்பட்டன

மாநிலத்தில் முழு அளவிலான மது விலக்கை அமல்படுத்த சத்தீஸ்கர் அரசு முடிவு செய்துள்ளது. இம் மாநிலத்தில், உள்ளூரில் தயாராகும் மதுபான வகைகளை விற்பனை செய்யவும், வெளிநாட்டு மது வகைகளை விற்பனை செய்யவும், தனித்தனியே மதுபானக்கடைகள் உள்ளன.

இருவகை மதுபானக் கடைகளையும் உடனடியாக மூடி விடாமல், படிப்படியாக குறைக்க மாநில அரசு தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கிராமங்களில் செயல்பட்டு வந்த 263 மதுக்கடைகள் நேற்று மூடப்பட்டன. இவற்றில், 227 உள்ளூர் மதுபான கடைகளும், 36 வெளிநாட்டு மதுபான கடைகளும் அடங்கும்.

இதுபற்றி, வணிகவரிகள் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மாநிலத்தில் முழு மது விலக்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டு, நடப்பு நிதியாண்டில் (2011-12) 263 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கிராமப் பகுதிகளில் செயல்பட்டு வந்தவை.

மதுபானத்துக்கு சிறுவர்கள் கூட அடிமையாவதாக கிராமப்புற பெண்களிடம் இருந்து அரசுக்கு நிறைய புகார்கள் வந்தன. எனவே தான் முதல் கட்டமாக கிராமங்களில் செயல்பட்டு வந்த மதுபான கடைகள் மூடப்பட்டன.

263 கடைகள் மூடப்பட்டுள்ளதால், ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 100 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். எனினும் மாநிலத்தில் முழு மது விலக்கை அமல்படுத்த, அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

No comments: