Wednesday, June 22, 2011

போர்க்குற்றம் குறித்து ஐ.நா. நிபுணர்குழு அறிக்கைக்கு இலங்கை அரசு ரகசிய பதில்.

போர்க்குற்றம் குறித்து ஐ.நா. நிபுணர்குழு அறிக்கைக்கு இலங்கை அரசு ரகசிய பதில்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிக் கட்ட போரில் ஆயிரக் கணக்கான தமிழர்களை ராணுவம் படுகொலை செய்தது. இந்த போர்க்குற்றம் குறித்து ஐ.நா.சபை நிபுணர் குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த குழுவின் அறிக்கையை ஏற்க இலங்கை மறுத்து வருகிறது. மேலும் அதை நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்தது. ஆனால், அந்த அறிக்கையில் கேட்கப்பட்டுள்ள 31 கேள்விகளுக்கும் இலங்கை அரசு ரகசியமான முறையில் பதில் அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த தகவலை ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி. லட்சுமண் கிரியெல்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை பாராளுமன்றத்தில் ஒதுக்கீடு சட்டம் மீதான விவாதம் நேற்று நடந்தது. அதில் அவர் பேசியபோது கூறியதாவது:-

இறுதிகட்ட போரின்போது பொதுமக்களில் ஒருவர் கூட கொல்லப்படவில்லை என அரசு கூறுவதை யாரும் நம்ப மாட்டார்கள். இதை அரசு சர்வதேசத்திடம் விளக்கி கூற வேண்டும். இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகவும், சேனல் 4 வீடியோ காட்சி தொடர்பாகவும் சர்வ தேசத்திற்கு விளக்கம் அளிக்க அரசு இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுதொடர்பாக சர்வதேச நாடுகளுடன் பேச்சு நடத்தி யிருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. 2 வருடங்களுக்கு முன்பு சேனல் 4 வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது. அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு கூறியது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரித்ததாக கூறிவிட்டு, அதில் கேட்கப்பட்டுள்ள 31 கேள்விகளுக்கும் அரசு மிகவும் ரகசியமான முறையில் பதில் அளித்துள்ளது. நாட்டிற்கு ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் அவப்பெயர்களை தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை பொய் என நிரூபிப்பது அரசின் கைகளில்தான் உள்ளது. ஆனால் இது தொடர்பாக அரசு உடனடியாக சர்வதேச நாடுகளுடன் பேச வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அலுவலகம் ஒன்றை கொழும்பில் திறந்து இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை பொய்யாக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments: