Wednesday, June 22, 2011

“பூஜ்ஜிய டிஸ்சார்ஜ்” தொழில் நுட்பத்தில் சாயக்கழிவு சுத்திகரிப்பு.

“பூஜ்ஜிய டிஸ்சார்ஜ்” தொழில் நுட்பத்தில் சாயக்கழிவு சுத்திகரிப்பு:    சாய ஆலை உரிமையாளர்கள் ஒப்புதல்

பூஜ்ஜிய டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தை சரிவர செயல்படுத்தாததால், திருப்பூரில் உள்ள அனைத்து சாய சலவை ஆலைகளையும் மூட, சென்னை ஐகோர்ட்டு கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி உத்தரவிட்டது.

அதன்படி, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அனைத்து சாய சலவை ஆலைகளும், தனியார் மற்றும் பொது சுத்திகரிப்பு நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. பனியன் துணிக்கு சாயமிடுவது பாதிக்கப்பட்டதால், பின்னலாடை உற்பத்தி குறைந்தது; லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டது.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதும், முத்தரப்பு பேச்சு நடத்தப்பட்டது. சாய ஆலை உரிமையாளர்கள், கழிவுநீரை கடலில் கலக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும், அதுவரை, 2,100 டி.டி.எஸ்., அளவுக்கு கழிவுநீரை வெளியேற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

தொழில் மற்றும் விவசாயிகளின் எதிர்கால நலன் கருதி, தமிழக அரசும் பூஜ்ய டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தை செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது. மேலும், தற்போது ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

அரசு அறிவுறுத்தலை தொழில் துறையினர் ஏற்று, “பூஜ்யடிஸ்சார்ஜ்‘ தொழில் நுட்பத்தில், சாயக்கழிவை சுத்திகரிப்பு செய்வதாக ஒப்புக்கொண்டனர். இது பற்றி திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் நாகராஜன், பொதுச்செயலாளர் முருகசாமி கூறியதாவது:-

கடந்த 140 நாட்களாக சாய சலவை ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், பின்னலாடை உற்பத்தியாளர்கள் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதே நிலை நீடித்தால், பின்னலாடை தொழிலே காணாமல் போய்விடும். நீண்டகால திட்டங்களை அரசு முடிவு செய்யும் வரை, தற்காலிகமாக பழைய தொழில்நுட்பத்தை பின்பற்ற ஒப்புதல் அளித்துள்ளோம்.

ஏற்கனவே அனுமதித்துள்ள அளவுக்கு, கழிவுநீரை சுத்திகரிக்க அனுமதி கோரி, மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு, சாய ஆலைகள் கடிதம் கொடுத்துவிட்டன. கண்காணிப்பு குழுவினர் விரைவில் ஆய்வு நடத்தி, இசைவாணை வழங்கினால் உடனடியாக சாய சலவை ஆலைகளை திறந்து இயக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments: